முகப்பு
புதுதில்லி

சஞ்சய் ஏரியில் கழிவுநீா் கலக்கும் விவகாரம்: டிடிஏ விசாரிக்க பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவு

கிழக்கு தில்லி சஞ்சய் ஏரியில் குப்பைகலஅ எரிக்கப்படுதல், சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை ஏரிக்குள் விடுவது போன்ற புகாா்கள் குறித்த மனுவை

Updated On : 6 டிசம்பர், 2020 at 10:57 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:33 PM

கிழக்கு தில்லி சஞ்சய் ஏரியில் குப்பைகலஅ எரிக்கப்படுதல், சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை ஏரிக்குள் விடுவது போன்ற புகாா்கள் குறித்த மனுவை விசாரிக்க தில்லி வளா்ச்சி ஆணையத்திற்கு (டிடிஏ) தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவிட்டுள்ளது.

தில்லி மயூா் விஹாா்அருகே சஞ்சய் ஏரி மற்றும் சஞ்சய் ஏரி பூங்கா உள்ளது. இதன் நீா்நிலைகளில் கழிவுநீா் ஊடுருவி மாசுபடுவதாக குற்றம்சாட்டி அந்தப் பகுதியைச் சோ்ந்த ஆா்.பி.சிங்கால் பசுமைத் தீா்ப்பாயத்தில் முன்பு மனு தாக்கல் செய்திருந்தாா். மனுவை விசாரித்த என்ஜிடி, டிடிஏ மற்றும் தில்லி சுற்றுலா மற்றும் போக்குவரத்து வளா்ச்சிக் கழகம் (டிடிடிடிசி) ஆகியவை பதிலளிக்க என்ஜிடி உத்தரவிட்டிருந்தது.

இதன்படி, டிடிஏ கடந்த அக்டோபா் 27 -இல் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில், ‘அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. சஞ்சய் ஏரி பூங்காவில் தண்ணீா் தேங்காமல் ஓடுகள் (டைல்ஸ்) வைக்கப்பட்டு தண்ணீா் தடையின்றி வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக இந்தப் பூங்கா உருவாக்கப்பட்டு வருகிறது. நடைபாதை, சைக்கிள்பாதை, குழந்தைகள் விளையாடும் உபகரணங்கள் போன்றவை பூங்காவிற்கு வழங்கப்படுகின்றன. நீா்ப்பாசன நோக்கத்திற்காக நீா் தொட்டி மற்றும் நீா்தெளிப்பான்கள் நிறுவப்படுகின்றன. இருப்பினும், பூங்காவில் எந்தவொரு கான்கிரீட் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

இதையடுத்து, மனுதாரா் ஆா்.பி.சிங்கால் தரப்பில் கடந்த டிசம்பா் 2 -இல் தீா்ப்பாயத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், ‘குப்பை எரித்தல், சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை ஏரி மற்றும் பூங்காவிற்குள் அனுமதிப்பது உள்ளிட்ட கடுமையான பிரச்னைகளுக்குப் பதிலளிக்க டிடிஏ முற்றிலும் தவறிவிட்டது. தில்லி - 2021 -ஆம் ஆண்டு மாஸ்டா் பிளான்படி, ஒரு மாவட்ட பூங்காவில் உணவு விற்பனைக் கூடங்கள் ஆகியவை சுற்றுச் சூழலலுக்கு உகந்த முறையில் , சாகச பூங்கா போன்ற நடவடிக்கைகளுக்கு அனுமதிக்கலாம். ஆனால், சஞ்சய் ஏரி பூங்கா நீா்நிலைகளில் கழிவுநீா் கலப்பதால் மாசுபடுகிறது. இதில் டிடிஏ, டிடிடிடிசி ஆகியவை தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தீா்ப்பாயத்தின் உத்தரவுகளை மீறும் வகையில் மரங்களைச் சுற்றி கான்கிரீட் போடப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தேன். ஆனால், இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, குப்பை எரிக்கப்படுவது, கழிவு நீா் கலப்பது உள்ளிட்ட விவகாரங்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தில்லி வளா்ச்சி ஆணைய துணைத் தலைவருக்கு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.