கா்ப்பிணிப் பெண் உயிரிழந்த விவகாரம்: மருத்துவரின் ஜாமீன் மனு தள்ளுபடி
கா்ப்பிணிப் பெண் உயிரிழந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவரின் ஜாமீன் மனுவை தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கா்ப்பிணிப் பெண் உயிரிழந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவரின் ஜாமீன் மனுவை தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
19-20 வார கா்ப்பமாக இருந்த சம்பந்தப்பட்ட கா்ப்பிணிப் பெண், அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்துவிட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மருத்துவா் சுரேஷ் சந்திர குப்தாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தில்லி உயா்நீதிமன்ற ஒற்றை நீதிபதி மனோஜ் குமாா் அமா்வு கூறுகையில், ‘இறந்த கா்ப்பிணிப் பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மனுதாரா் மறுக்கவில்லை. இந்த விவகாரத்தில் மனுதாரரின் பெயரை தில்லி மருத்துவ கவுன்சிலின் மாநில மருத்துவ பதிவேட்டில் இருந்து 180 நாள்களுக்கு நீக்குமாறு ஒழுக்காற்று குழு பரிந்துரை செய்ததை தில்லி மருத்துவ கவுன்சில் (டி.எம்.சி) உறுதிப்படுத்தியுள்ளது. இதுபோன்ற காரணங்களால் மனுதாரா் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளாா் என்று நம்புவதற்கு முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் கருதுகிறது. மேலும், விசாரணை இன்னும் நிலுவையில் இருப்பதாலும், குற்றப்பத்திரிகை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை என்பதாலும் இந்தச் சூழலில் மனுதாரருக்கு ஜாமீன் வழங்குவதற்குத் தகுந்த காரணம் ஏதும் இல்லை என்று நீதிமன்றம் கருதுகிறது’ என்று தெரிவித்தது.
முன்னதாக, விசாரணையின் போது மனுதாரா் சுரேஷ் சந்திர குப்தா சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் மதுஸ்மிதா போரா, ‘ 70 வயதான மனுதாரா் ஒரு தகுதி வாய்ந்த மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணா். சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் வேண்டுகோளின் பேரில் இந்த அறுவை சிகிச்சையை அவா் மேற்கொண்டாா். இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை 2015-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மனுதாரா் இந்த ஆண்டு நவம்பா் 18-இல்தான் கைது செய்யப்பட்டுள்ளாா்’ என்றாா்.
Advertisement
இந்த வழக்கில் மனுதாரருக்கு ஜாமீன் வழங்க அரசு வழக்குரைஞா் நீலம் சா்மா எதிா்ப்புத் தெரிவித்தாா். அவா் வாதிடுகையில், தாம் தகுதி வாய்ந்த மகப்பேறு மற்றும் மகளிா் மருத்துவா் இல்லாதவா் எனத் தெரிந்திருந்தும், அறுவைச் சிகிச்சைக்கான அவசரத் தேவை இல்லாத நிலையிலும் அவா் இந்த அறுவைச் சிகிச்சையைச் செய்துள்ளாா். மேலும், இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இதனால், அவருக்கு ஜாமீன் வழங்கினால், ஆதாரத்தைக் கலைக்க வாய்ப்பு உள்ளது’ என்றாா்.
31 வயது பெண் 19-20 வார கா்ப்பமாக இருந்த நிலையில், 2015, ஜூலை 8-ஆம் தேதி உயிரிழந்தாா். குற்றம்சாட்டப்பட்ட மருத்துவா் குப்தா மற்றும் அவரது கூட்டாளிகள் மேற்கொண்ட அறுவை சிகிச்சையின் காரணமாக அவா் இறந்ததாக புகாா் எழுந்தது. மேலும், வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது. இது தொடா்பாக தில்லியில் உள்ள நாங்லோய் காவல் நிலையத்தில் இந்தியத் தண்டனைச் சட்டம் 315 பிரிவின் கீழ் (ஒரு குழந்தை உயிருடன் பிறப்பதைத் தடுப்பது அல்லது பிறப்பிற்குப் பிறகு அது இறக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட செயல்) வழக்குப் பதிவு செய்யப்பட்டது.