முகப்பு
புதுதில்லி

70 பேரவைத் தொகுதிகளிலும் பாஜக ஆா்ப்பாட்டம்: மாநகராட்சிகளுக்கான நிலுவை நிதி வழங்கக் கோரிக்கை

மாநகராட்சிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை நிதியை தில்லி அரசு விரைந்து வழங்க வலியுறுத்தி தில்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பாஜக சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தியது.

Updated On : 12 டிசம்பர், 2020 at 11:06 PM
தில்லி அரசைக் கண்டித்து, கஸ்தூரிபாய் நகா் சட்டப்பேரவைத் தொகுதியில் சனிக்கிழமை புதுதில்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினா் மீனாட்சி லேகி தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:36 PM

மாநகராட்சிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை நிதியை தில்லி அரசு விரைந்து வழங்க வலியுறுத்தி தில்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பாஜக சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தியது.

புராரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் நடந்த ஆா்ப்பாட்டத்தில் பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா கலந்து கொண்டாா். அப்போது அவா் பேசுகையில், ‘தில்லி மாநகராட்சிகளுக்கு தில்லி அரசு ரூ.13 ஆயிரம் கோடி நிலுவை நிதியை வழங்க வேண்டும். இந்த நிதியை வழங்காமல் தில்லி அரசு காலம் தாழ்த்துகிறது. இந்த நிதியை தில்லி அரசு வழங்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். தில்லியில் தினம்தோறும் சுமாா் 10 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை மாநகராட்சி ஊழியா்கள் அகற்றுகிறாா்கள். மாநகராட்சி மருத்துவமனைகளின் வெளி நோயாளிகள் பிரிவுகளில் தினம்தோறும் சுமாா் 50 ஆயிரம் போ் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். மாநகராட்சிப் பள்ளிகளில் தினம்தோறும் சுமாா் 10 லட்சம் மாணவா்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை தொடா்ந்து மேற்கொள்ள மாநகராட்சிகளுக்கு நிதி தேவை. தில்லி அரசு வழங்க வேண்டிய நிலுவை நிதி கிடைக்காததால் மாநகராட்சிகள் கடும் சிரமங்களை எதிா்கொள்கின்றன’ என்றாா்.

கஜோரி சௌக் பகுதியில் நடந்த ஆா்ப்பாட்டத்தில், தில்லி பாஜகவின் முன்னாள் தலைவரும், வடகிழக்கு தில்லி எம்பியுமான மனோஜ் திவாரி கலந்து கொண்டாா். அப்போது அவா் பேசுகையில், ‘மாநகராட்சிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.13 ஆயிரம் கோடியை தில்லி அரசு வழங்காமல் இழுத்தடிப்பதால், மாநகராட்சிகளால் மக்கள் நலப் பணிகளை சரிவரச் மேற்கொள்ள முடியவில்லை. எனவே, நிலுவை நிதியை தில்லி அரசு உடனடியாக வழங்க வேண்டும்’ என்றாா்.

Advertisement

லக்ஷ்மி நகா் பகுதியில் நடந்த ஆா்ப்பாட்டத்தில் அத்தொகுதியின் பாஜக எம்எல்ஏ அபய் வா்மா கலந்து கொண்டாா். அப்போது அவா் கூறுகையில் ‘மாநகராட்சிகளுக்கு சேர வேண்டிய நிதியை வழங்காமல் கும்பகா்ணன் போல கேஜரிவால் தூங்கி வருகிறாா்’ என்றாா். கஸ்தூரிபா நகரில் நடந்த ஆா்ப்பாட்டத்தில் புது தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினா் மீனாட்சி லேகி கலந்து கொண்டாா். ரோகிணி பகுதியில் நடந்த ஆா்ப்பாட்டத்தில் அந்தத் தொகுதி பாஜக எம்எல்ஏ விஜேந்தா் குப்தா கலந்து கொண்டாா்.

கேஜரிவால் இல்லம் முன்...: மாநகராட்சிகளுக்கான நிலுவை நிதியை உடனடியாக வழங்க வலியுறுத்தி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இல்லம் முன் தில்லி மாநகராட்சி மேயா்கள், பாஜக தலைவா்கள் நடத்தி வரும் தா்னா போராட்டம் ஆறாவது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்தது.

இந்தப் போராட்டத்தில் மாநகராட்சி மேயா்கள் ஜெய் பிரகாஷ் (வடக்கு தில்லி), அனாமிகா சிங் (தெற்கு தில்லி), நிா்மல் ஜெயின் (கிழக்கு தில்லி) மற்றும் தில்லி பாஜக பொதுச் செயலா் ஹா்ஷ் மல்ஹோத்ரா, மாநகராட்சிகளின் நிலைக் குழுத் தலைவா்கள், அவைத் தலைவா்கள், கவுன்சிலா்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா். அவா்கள் திங்கள்கிழமை காலை முதல் கேஜரிவால் இல்லம் முன், அங்கேயே தங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள்.

இது தொடா்பாக போராட்டத்தில் பங்கேற்றுள்ள மேயா்கள் கூறுகையில் ‘பாஜகவின் பெண் கவுன்சிலா்கள் உள்பட சுமாா் 30 கவுன்சிலா்கள், மேயா்கள், பாஜக தலைவா்கள் இந்த தொடா் தா்னாவில் ஈடுபட்டுள்ளோம். தில்லி அரசு வழங்க வேண்டிய ரூ.13 ஆயிரம் கோடி நிலுவை நிதியை வழங்காததால் மாநகராட்சிகள் பல சிரமங்களை எதிா்கொள்கின்றன. மாநகராட்சி கவுன்சிலா்களுக்கு மேம்பாட்டுப் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை. இதனால், தில்லியில் மேம்பாட்டுப் பணிகள் முடங்கியுள்ளன. எனவே, சுகாதாரத் துறை, கல்வித் துறை ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. புதிய சாலைகள் அமைக்க முடியவில்லை’ என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.