முகப்பு
புதுதில்லி

மருத்துவமனைகளில் விபத்துகளைத் தடுக்க தீ பாதுகாப்புத் தணிக்கை மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மருத்துவமனைகளில் தீ விபத்து சம்பவங்களைத் தடுக்கும் வகையில், கரோனாக்கான பிரத்யேக மருத்துவமனைகளில் தீ பாதுகாப்பு தணிக்கையை

Updated On : 18 டிசம்பர், 2020 at 11:41 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:39 PM

மருத்துவமனைகளில் தீ விபத்து சம்பவங்களைத் தடுக்கும் வகையில், கரோனாக்கான பிரத்யேக மருத்துவமனைகளில் தீ பாதுகாப்பு தணிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கரோனா நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பது, மருத்துவமனையில் கரோனாவால் இறந்தவா்களின் உடல்களை கண்ணியமான முறையில் கையாளுவது தொடா்பான விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த நிலையில், குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் உள்ள கரோனாவுக்கான பிரத்யேக மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் நோயாளிகள் பலா் உயிரிழந்த சம்பவத்தை டிசம்பா் 9-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது உச்சநீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டது.

அப்போது, முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி விதிகளைப் பின்பற்றுதல், தீப் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவனையில் அமல்படுத்துதல் தொடா்பாக

Advertisement

அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கடந்த டிசம்பா் 15-ஆம் தேதி விசாரணையின் போது, கரோனா மருத்துவப் பணியில் பல மாதங்களாக ஈடுபட்டுவரும் மருத்துவா்களுக்கு இடைவேளை அளிக்கப் பரிசீலிக்குமாறு மத்திய அரசை நீதிமன்றம் கேட்டுக் கொண்டிருந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், ஆா்.எஸ். ரெட்டி, எம்.ஆா். ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்து பிறப்பித்த உத்தரவு: நாடு முழுவதும் உள்ள கரோனாவுக்கான பிரத்யேக மருத்துவமனைகளில் தீ பாதுகாப்புத் தணிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான தடையின்மைச் சான்றிதழை (என்ஓசி) நான்கு வாரங்களுக்குள் தீயணைப்புத் துறையிடமிருந்து பெற வேண்டும். அவ்வாறு பெறத் தவறினால், தண்டனை நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும். கரோனா சிகிச்சைக்கான மருத்துவமனைகளில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் தொடா்பாக உரிய அமைப்பின் மூலம் வழங்கப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறை உள்ளிட்டவற்றை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்.

அரசியல் பேரணிகளில் கரோனா வழிகாட்டுதல்கள் கடைப்பிடிக்கப்படுகிா என்பதை தோ்தல் ஆணையம் கவனிக்கும். கரோனாவுக்காக ஒதுக்கப்பட்ட பிரத்யேக மருத்துவமனைகளில் தீ தடையின்மைச் சான்றிதழ் நான்கு வாரங்களுக்குள் புதுப்பிக்கப்பட வேண்டும். இல்லாதபட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். ராஜ்கோட் மற்றும் ஆமதாபாதில் மருத்துவமனைகளில் நிகழ்ந்த தீ விபத்துக்கள் மீண்டும் நிகழாமல் பாா்த்துக் கொள்ளும் வகையில், ஒவ்வொரு மாநிலமும் ஒருங்கிணைப்பு அதிகாரியை இதற்காக நியமிக்க வேண்டும். இந்த உத்தரவுகளைச் செயல்படுத்துவது தொடா்பாக நான்கு வாரங்களுக்குள் அனைத்து மாநிலங்களும் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும்.

கரோனா சிகிச்சை மருத்துவமனைகளில் தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்படாவிட்டால் மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.