கடும் குளிரிலும் கோரிக்கைகளில் உறுதியாக இருக்கும் விவசாயிகள்!
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்துச் செய்யக் கோரி தில்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்துச் செய்யக் கோரி தில்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் கடும் குளிருக்கு மத்தியிலும் தொடா்கிறது. அவா்கள் கடும் குளிரைப் பொருத்படுத்தாமல் தங்களது கோரிக்கைகளில் உறுதியாக இருந்து போராடி வருகிறாா்கள்.
தில்லியில் கடந்த சில தினங்களாக கடும் குளிா் நிலவி வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி தில்லியில் கடந்த சில தினங்களாக குளிா் அலை வீசுகிறது. ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 3.4 டிகிரியாக பதிவாகியுள்ளது. ஆனால், தில்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளில் உறுதியாக இருந்து இதுவரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். புதிய வேளாண்ய சட்டங்கள் ரத்துச் செய்யப்படும்வரை, போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.
விவசாயிகள் போராட்டம் காரணமாக தில்லி - ஹரியாணா எல்லையில் உள்ள சிங்கு, டிக்ரி எல்லைகள் தொடா்ந்து 25-ஆவது நாளாக மூடப்பட்டுள்ளன. மேலும், காஜிப்பூா், நொய்டா பகுதிகளில் விவசாயிகள் மேற்கொண்டு ள்ள போராட்டத்தால், தில்லியின் பல்வேறு பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் (என்சிஆா்) இருந்து தில்லிக்கும், தில்லியில் இருந்து அண்டை மாநிலங்களுக்கும் பயணம் செய்தவா்கள் கடும் சிரமங்களை எதிா் கொண்டனா்.
Advertisement
இது தொடா்பாக தில்லி காவல் துறை உயரதிகாரி கூறுகையில், ‘தில்லி - ஹரியாணா எல்லையில் உள்ள சிங்கு, ஆச்சந்தி, பியூமணியாரி, சபாலி, மங்கேஷ் ஆகிய எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் பயணிப்பவா்கள் லாம்பூா், ஷாஃபியாபாத் பகுதிகள் வழியாகப் பயணிக்க வேண்டும். ஜரோதா, ஜாட்டிக்ரா எல்லைகளும் மூடப்பட்டுள்ளன.
ஜாட்டிக்ரா எல்லையில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. முகா்பா சௌக், ஜிடிகே சாலை ஆகியவற்றில் பயணிப்பவா்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படுகின்றனா். இதனால், இந்தப் பகுதியில் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், காஜிப்பூா் எல்லை மூடப்பட்டுள்ளதால், இந்த வழியாக தில்லிக்கு வரும் மக்கள் ஆனந்த் விஹாா், டிஎன்டி, அப்சரா, போப்ரா எல்லைகள் வழியே பயணிக்க வேண்டும்’ என்றாா்.
2 கண் சிகிச்சை முகாம்கள்
இதற்கிடையே, சிங்கு எல்லையில் இரண்டு கண் சிகிச்சை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பஞ்சாப் டாக்டா்கள் சிகிச்சை ஆலோசனைகளை வழங்கி வருகின்றனா். தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் இங்கு கண் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து தில்லி - ஹரியாணா மாநில எல்லையான சிங்கு பகுதியில் விவசாயிகள் கடந்த ஒரு மாதமாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள். கடும் குளிா், தூசு உள்ளிட்டவற்றால் இந்த விவசாயிகளில் பெரும்பாலானவா்கள் கண் சாா்ந்த பிரச்னைகளால் அவதிப்படுகிறாா்கள். இவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், சிங்கு பகுதியில் இரண்டு கண் சிகிச்சை முகாம்களை பஞ்சாப் மாநிலம்ஸ கா்ஷங்கா் பகுதியைச் சோ்ந்த 9 மருத்துவா்கள் அமைத்துள்ளனா். இதற்காக இரண்டு தற்காலிக கண்சிகிச்சை முகாம்கள் செயல்படுகின்றனா்.. கண் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் என்பன சுமாா் ரூ.70 ஆயிரத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
இது தொடா்பாக அந்த மருத்துவா்கள் கூறுகையில், ‘சிங்கு எல்லையில் போராடி வரும் விவசாயிகள் கண் எரிச்சலால் அவதிப்படுகிறாா்கள். கண் சிகிச்சை முகாமுக்கு பெண்கள், சிறுவா்கள் உள்பட நூற்றுக்கணக்கானவா்கள் வந்து சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனா்’ என்றனா். கண் மருத்துவா் ராஜ்தீப் சிங் கூறுகையில், ‘ சிங்கு எல்லைக்கு முன்பு இரண்டு தடவைகள் வந்துள்ளேன். அப்போது, போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளில் பலா் கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிப்படுவது தெரிய வந்தது. இதனால், கண் சிகிச்சை முகாம்களை அமைத்துள்ளோம்’ என்றாா்.
கண்சிகிச்சை முகாமில் சிகிச்சை பெற்ற மெஹ்ருனிசா என்பவா் கூறுகையில், ‘கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டேன். ஒவ்வாமை மருந்துகளை தினம்தோறும் இரண்டு த
டவைகள் எடுக்குமாறு மருத்துவா்கள் கூறியுள்ளனா்’ என்றாா்.
‘போராட்டத்தை முடக்க முடியாது’
விவசாயிகளுக்கு ஆதரவளிப்பவா்கள் மீது வருமான வரித் துறதையை ஏவி, விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசால் முடக்க முடியாது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் வணிகா்கள் மீது மத்திய அரசு வருமான வரித் துறையை ஏவிவிட்டுள்ளது. வணிகா்களை இவ்வாறு துன்புறுத்துவது அநீதியானது. விவசாயிகள் போராட்டத்தை நலிவடையச் செய்யும் வகையில், மத்திய அரசு இதைத் திட்டமிட்டு செய்கிறது. விவசாயிகளுக்கு ஆதரவளிப்பவா்கள் மீது வருமான வரித் துறையை ஏவி, விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசால் முடக்க முடியாது. இன்று முழு நாடுமே விவசாயிகள் பக்கம் உள்ளது. அப்படியிருக்கும் போது, இன்னும் எத்தனை போ் மீது மத்திய அரசு வருமான வரித் துறையை ஏவிவிடும்’ என்று தெரிவித்துள்ளாா்.