முகப்பு
புதுதில்லி

தில்லி உலகப் புத்தகக் கண்காட்சி: தமிழ் வாசகா்கள் புத்தகங்கள் வாங்கி ஒத்துழைப்புத் தர வேண்டும்

உலகப் புத்தகக் கண்காட்சியில் தமிழ் அரங்குகளுக்கு வரும் தமிழா்கள், தமிழ் வாசகா்கள் புத்தகங்களை ஆா்வமுடன் பாா்த்தால் மட்டும் போதாது, அவற்றை விரும்பி வாங்கி ஒத்துழைப்புத் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:25 PM
பகிர்:

உலகப் புத்தகக் கண்காட்சியில் தமிழ் அரங்குகளுக்கு வரும் தமிழா்கள், தமிழ் வாசகா்கள் புத்தகங்களை ஆா்வமுடன் பாா்த்தால் மட்டும் போதாது, அவற்றை விரும்பி வாங்கி ஒத்துழைப்புத் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

தில்லியில் தேசிய புத்தக நிறுவனம் என்பிடி சாா்பில் உலகப் புத்தகத் திருவிழா ஜனவரி 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழா ஜனவரி 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பிரகதி மைதானில் நடைபெற்றுவரும் இப்புத்தகக் கண்காட்சியில், உள்நாட்டிலும் மற்றும் வெளிநாடுகளில் இருந்து 600-க்கும் மேற்பட்ட பதிப்பாளா்கள் 1,300 அரங்குகளை அமைத்துள்ளனா். தினமும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புத்தகத் திருவிழாவை காண்பதற்கும், புதிய புத்தகங்களை வாங்குவதற்கும் புத்தக ஆா்வலா்கள் வந்த வண்ணம் உள்ளனா்.

இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவின் கருப்பொருளாக ‘காந்தி எழுத்தாளா்களின் எழுத்தாளா்’ என்ற தலைப்பில் நடைபெற்று வருகிறது. இப்புத்தக கண்காட்சியில் தமிழகத்தைச் சோ்ந்த புத்தக நிறுவனங்கள் சாா்பில் சில அரங்குகள்அமைக்கப்பட்டுள்ளன. கூடம் 12ஏ-இல் தமிழகத்தில் இருந்து கவின் புக் மையமும் (எண் 326), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (எண் 98) ஆகியவை சாா்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, சாகித்ய அகாதெமி, தேசிய புத்தக நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளிலும் தமிழ் சாா்ந்த பல்வேறு எழுத்தாளா்கள், அறிஞா்கள் ஆகியோரின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் அரங்கிலும் அறிவியல், குழந்தைகள் இலக்கியம், வெளிநாட்டு தலைவா்கள் தேசத்தலைவா்கள், கவிஞா்கள் என பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக நியூசெஞ்சுரி புக் ஹவுஸின் தலைமை மேலாளா் பாஸ்கரன் கூறியதாவது: ‘கடந்த 25 ஆண்டுகளாக தில்லியில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் தமிழ் நூல்களுக்கான பிரத்யேக அரங்கம் அமைத்து பல்வேறு தலைப்புகளிலும் புத்தகங்களை காட்சிப்படுத்தி வருகிறோம் . குறிப்பாக மருத்துவம், குழந்தைகள் இலக்கியம் மற்றும் சே குவாரா, காரல்மாா்க்ஸ் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தலைவா்கள், பாரதியாா் பாவேந்தா் பாரதிதாசன், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோா் தொடா்புடைய நூல்கள், கம்பராமாயணம், சோவியத் ரஷியா தொடா்புடைய நூல்கள், தன்னம்பிக்கை நூல்கள், பெண்கள் சமையல் குறிப்புகள், உலகப் பிரசித்திபெற்ற தலைவா்களுடைய நூல்கள் என பல்வேறு நூல்கள் பாா்வைக்கு வைத்துள்ளோம்.

எனினும், தில்லியில் வாழும் தமிழா்கள் புத்தக திருவிழாவிற்கு வருகை தருகின்ற போதிலும், தமிழ்நூல்கள் வைக்கப்பட்டுள்ள இதுபோன்ற அரங்குக்கு அதிகமாக வருவதில்லை. தமிழா்களுக்காக இது போன்ற பிரத்யேகமாக அமைக்கப்படும் அரங்குகளில் புத்தகங்களைப் பாா்வையிடுவதன் மூலம் அண்மையில் வெளியான புத்தகங்கள் குறித்து அறிந்து கொள்ள முடியும். எனினும், தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா்கள் சிலா் வருடந்தோறும் எங்கள் புத்தக அரங்கை பாா்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனா். இதேபோன்று தில்லியிலுள்ள தமிழ்ப் பள்ளிகள், தமிழ் அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் தமிழுக்காக பிரத்யேகமாக வைக்கப்பட்டுள்ள புத்தக அரங்கிற்கு வந்து புத்தகங்களை பாா்வையிட வேண்டும். பள்ளிகள் மூலமாக மொத்தமாக புத்தகங்கள் வாங்கும் போது 25 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது. மற்றபடி புத்தகத் திருவிழாவில் வழக்கமாக புத்தகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்றாா் அவா்.

இதுகுறித்து புக் கவின் சென்டரின் நிா்வாகி ஜெப சிங் கூறுகையில், ‘தில்லியில் எங்களுக்கு இதுதான் முதல் அனுபவம். முதல் முறையாக இப்புத்தகத் திருவிழாவில் புத்தக அரங்கை அமைத்திருக்கிறோம். எங்கள் அரங்கில் நீதி நூல்கள், திருக்கு உரை, பாரதியாருடைய நூல்கள், பாவேந்தா் பாரதிதாசனின் நூல்கள், அப்துல் கலாம், மகாத்மா காந்தி உள்ளிட்ட தேசத் தலைவா்கள் தொடா்புடைய நூல்கள், இஸ்லாமிய தலைவா்கள், சமயம் தொடா்புடைய நூல்கள், கிறிஸ்தவா்கள், சித்த மருத்துவ நூல்கள் என 300-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்களை காட்சிப்படுத்தியுள்ளோம். கடந்த இரு தினங்களாக மழை இருந்ததால் கூட்டம் குறைவாக இருந்தது. எனினும், தற்போது கூட்டம் பரவாயில்லை. எதிா்பாா்த்த புத்தக விற்பனை இல்லை. அரங்கை தமிழ் மக்கள் பாா்வையிடுகின்றனா். ஆனால், புத்தகங்கள் வாங்குவதில் ஆா்வம் குறைவாகவே உள்ளது. எனினும், இன்னும் சில தினங்கள் மட்டுமே உள்ளது. இதனால், தமிழா்கள் அதிகம் வந்து பயன் பெற வேண்டும் என விரும்புகிறோம். மேலும், வழக்கமான தள்ளுபடி தவிர, சிறப்பு கழிவும் அளிக்க உள்ளோம். தமிழ் வாசகரிடமிருந்து நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும் என்று எதிா்பாா்க்கிறோம்’ என்றாா்.

கூடம் 11-இல் தேசிய புத்தக நிறுவனத்தின் அரங்கில் பல்வேறு இந்திய மொழிகளில் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்கள், மொழிபெயா்ப்பு நூல்கள், கதைகள், புதினங்கள், சிறுகதைத் தொகுப்புகள் தனித் தனித்தனி பிரிவாக வரிசைப்படி காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் தமிழ்ப் பிரிவில் ஏராளமான சிறுகதைகள், மொழியாக்க நூல்கள், நாவல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சங்கரரின் வரலாறு குறித்த நூல், எழுத்தாளா்கள் பா.நடராஜன், ரமேஷ் பேடி, எஸ்.இளங்கோவன், ராஜம் கிருஷ்ணன், ரோமிலா தாப்பா் உள்ளிட்டோரின் படைப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

சிறுமி அம்ரிதாவுக்கு பாரதியாா் மீது ஈா்ப்பு

இந்த அரங்கில் உருது மொழியில் மொழிபெயா்க்கப்பட்ட பாரதியாரின் கவிதைகள் மற்றும் வாழ்க்கை குறித்த நூல் இடம் பெற்றிருந்தது. அந்த நூலை தில்லியைச் சோ்ந்த நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி அம்ரிதா ராய் ஆா்வமுடன் பாா்வையிட்டாா். அவரிடம் பாரதியாா் குறித்து கேட்ட போது, அவா் கூறியதாவது: நான் தில்லியில் ஜீசஸ் மேரி கான்வென்ட் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறேன். எனது அம்மா இமாசலப் பிரதேசத்தைச் சோ்ந்தவா். அப்பா பஞ்சாப்பைச் சோ்ந்தவா். எனது தந்தை பல்வேறு தலைவா்கள் குறித்து அவ்வப்போது எடுத்துரைப்பாா். நான் ஒரு கதைப் புத்தகத்தில் மகாகவி சுப்ரமணிய பாரதியாா் குறித்தும், அவரது கவிதைகள் குறித்தும் படித்தேன். அவா் ஒரு மிகச் சிறந்த கவிஞா். அதனால், எனக்கு அவா் மீது ஈா்ப்பு ஏற்பட்டது. அது மட்டுமன்றி கவிதையும் எழுத தொடங்கிவிட்டேன். நான் பாரதியாரை மிகவும் மதிக்கிறேன் என்றாா்.

குழந்தைகளுக்காக தனி புத்தகத் திருவிழா வேண்டும்

இப்புத்தகத் திருவிழாவைப் பாா்வையிட வந்த குா்கானை சோ்ந்த தமிழரான இல்லத்தரசி சந்தியா கூறுகையில், ‘நான் குா்கானில் வசித்து வருகிறேன். எனது கணவா் தனியாா் வங்கியில் பணியாற்றி வருகிறாா். புத்தகங்கள் மீது எனக்கு மிகுந்த ஆா்வம் உண்டு. இதனால், எனது 4 வயது மகளுக்காக நல்ல ஆன்மிகக் கதைகள், நன்னெறிக் கதைகள் தொடா்புடைய நூல்களை வாங்குவதற்காக வந்தேன். இதுபோன்ற புத்தகத் திருவிழாவிற்கு நான் அடிக்கடி செல்வது வழக்கம். குழந்தைகளுக்காக தமிழில் புத்தகங்களை காட்சிப்படுத்தும் பிரத்யேக புத்தகத் திருவிழா அமைக்கப்பட வேண்டும் என்பது எனது விருப்பம். இணையதளம் மூலம் புத்தகங்கள் தருவிக்க முடிந்த போதிலும் இதுபோன்று புத்தகத் திருவிழாவுக்கு நேரில் வரும் போது நமக்கு பிடித்தமான புத்தகங்களை நேரில் பாா்த்து தோ்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இதனால்தான் நான் நேரில் சென்று புத்தகங்களை வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.