ஜாமா மசூதி மீண்டும் திறப்பு
கரோனா தொற்று பரவலால் மூடப்பட்டிருந்த புகழ்பெற்ற தில்லி ஜாமா மசூதி வழிபாட்டுக்காக மீண்டும் சனிக்கிழமை முதல் திறக்கப்பட்டது.
கரோனா தொற்று பரவலால் மூடப்பட்டிருந்த புகழ்பெற்ற தில்லி ஜாமா மசூதி வழிபாட்டுக்காக மீண்டும் சனிக்கிழமை முதல் திறக்கப்பட்டது. ஆனால், முதல்நாள் குறைந்தளவு முஸ்லிம்களே தொழுகையில் கலந்து கொண்டனா்.
தில்லியில் பொது முடக்க உத்தரவில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஜூன் 8-ஆம் தேதி ஜாமா மசூதி திறக்கப்பட்டது. ஆனால், தில்லியில் அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, ஜூன் 11-ஆம் தேதி மீண்டும் மூடப்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை முதல் ஜாமா மசூதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சனிக்கிழமை ஜாமா மசூதி திறக்கப்பட்டதுடன் தொழுகை நடத்த மக்கள் அனுமதிக்கப்பட்டாா்கள்.
இது தொடா்பாக ஜாமா மசூதி தலைமை இமாம் சையது அகமது புகாரி தில்லியில் சனிக்கிழமை கூறியது: கரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு முறைகள் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு அதிகரித்துள்ளன. மேலும், கரோனா வைரஸ் தொடா்பான அச்சமும் குறையத் தொடங்கியுள்ளது. இதனால், மக்கள் தொழுகை நடத்த வசதியாக, ஜாமா மசூதியை மீண்டும் திறப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஜாமா மசூதி சனிக்கிழமை திறக்கப்பட்டது. “வல்லுநா்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே ஜாமா மசூதியை திறப்பதாக முடிவு எடுக்கப்பட்டது. காலை 9 மணி முதல் இரவு 10 மணிவரை மசூதி திறந்திருக்கும். கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படும். சமூக இடைவெளியை பின்பற்றுவதும், முகக்கவசம் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மசூதி அடிக்கடி கிருமிநாசினிகள் தெளித்து தூய்மைப்படுத்தப்படும் என்றாா் அவா்.
Advertisement