தில்லி, என்சிஆரில் 3-ஆவது நாளாக சூறைக்காற்றுடன் மழை!
தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதிகளில் 3-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சூறைக்காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து காணப்பட்டது.
தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதிகளில் 3-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சூறைக்காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து காணப்பட்டது.
இது தொடா்பாக தில்லியில் லக்ஷ்மி நகா், ஐடிஓ, புதுதில்லி, ஆதா்ஷ் நகா், இந்தியா கேட், மண்டி ஹவுஸ் உள்பட பல்வேறு பகுதிகள் மற்றும் நொய்டா, கிரேட்டா் நொய்டா, புலந்தஷாகா், பானிபட் பலாவத், ஃபரீதாபாத், காஜியாபாத், மொரதாபாத் ஆகிய இடங்களில் சூறைக்காற்று மற்றும் இடியுடன் மழை பெய்தது. செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 0.6 மி.மீ. பதிவாகியுள்ளது. இதற்கிடையே, தில்லியில் இந்த வாரம் கூடுதலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், ‘புதன்கிழமையும் மிதமானது முதல் கன மழை பெய்ய வாய்ப்பு அதிகமாக உள்ளது. வியாழக்கிழமை லேசான மழை இருக்கும். அதன் பிறகு இந்த வாரம் முழுவதுமே தூறல் மழை பெய்யும்’ என்றாா்.
Advertisement
வெப்பநிலை: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 26.4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 34.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றின் ஈரப்பதத்தின் அளவு காலையில் 80 சதவீதமாகவும், மாலையில் 78 சதவீதமாகவும் இருந்தது. பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 28.4 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 35.9 டிகிரி செல்சியஸ் எனவும் ஆயாநகரில் முறையே 25.4 டிகிரி செல்சியஸ் மற்றும் 34 டிகிரி செல்சியஸ் எனப் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 76 சதவீதம், மாலையில் 74 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 74 சதவீதம் மற்றும் 71 சதவீதம் எனவும் பதிவாகியிருந்தது.
காற்றின் தரம்: தில்லி, என்சிஆரில் காற்றின் தரத்தில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டது. இதனால், சில இடங்களில் காற்றின்தரக் குறியீடு ‘திருப்தி’ பிரிவிலும் சில இடங்களில் ‘நன்று’ பிரிவிலும் இருந்தது. தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 53 புள்ளிகளாகப் பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே புதன்கிழமை (ஜூலை 8) இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், காற்றின் தரத்தில் பெரிய அளவில் மாற்றமின்றி திருப்தி பிரிவில் நீடிக்கும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.