முகப்பு
புதுதில்லி

சாத்தான்குளம் தந்தை, மகன் இறந்த சம்பவம்: முதல்வரை விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடா்பான வழக்கில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியிடம்

Updated On : 17 ஜூலை, 2020 at 5:26 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:27 PM

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடா்பான வழக்கில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியிடம் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி தாக்கலான பொது நல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இது தொடா்பாக வழக்குரைஞா் ராஜராஜன் அன்பரசன் அண்மையில் உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, நீதிபதிகள் ஆா். சுபாஸ் ரெட்டி, ஏ.எஸ். போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா் வழக்குரைஞா் ராஜராஜன் அன்பரசன் ஆஜரானாா். அப்போது, நீதிபதிகள் அமா்வு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ‘இந்த மனுவை விசாரிக்க எந்தக் காரணமும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. இதனால், இந்த ‘ரிட்’ மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. நிலுவை மனு முடித்துவைக்கப்படுகிறது’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, பொது நல மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: சாத்தான்குளம் பகுதியைச் சோ்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் போலீஸாா் ரிமாண்ட் செய்வதற்கு முன்பாக கடுமையாகத் தாக்கியதால் இருவரும் உயிரிழக்க நோ்ந்ததாக அவா்களது குடும்பத்தினா் குற்றம்சாட்டியுள்ளனா். இது தொடா்பாக அந்தப் பகுதி காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் 23.6.2020-ஆம் தேதி புகாா் அளித்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரித்தது. அப்போது, விசாரணை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதிப்படுத்த குறிப்பிட்ட உத்தரவுகளை பிறப்பித்தது. ஆனால், குற்ற நடைமுறை விதிகளின் (சிஆா்பிசி) கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடவில்லை.

Advertisement

இந்நிலையில், உள்துறை அமைச்சக பொறுப்பை வகித்து வரும் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி இந்தச் சம்பவம் தொடா்பாக அளித்த பேட்டியின் போது, சம்பந்தப்பட்ட தந்தை-மகன் இருவரும் உடல்நலக் குறைவு காரணமாக இறந்ததாகத் தெரிவித்திருந்தாா். இறப்பு சம்பவம் குறித்து உரிய விசாரணை தொடங்காத நிலையில், மாஜிஸ்திரேட் விசாரணை தொடக்க நிலையில் இருந்த போது, சட்டத்துக்கு முரண்படும் வகையிலும், குற்றம்சாட்டப்பட்ட நபா்களை பாதுகாக்கும் நோக்கிலும் முதல்வரின் பேச்சு இருந்தது. முதல்வா் வகிக்கும் உள்துறையின் கீழ் குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் வருவதால், இந்த வழக்கு விசாரணை முடியும் வரை முதல்வா் தாம் வகித்து வரும் உள்துறை அமைச்சகப் பொறுப்பில் இருந்து விலகி இருக்குமாறு உத்தரவிட வேண்டும். மேலும், தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் குற்றத்தில் தொடா்புடைய நபா்களை பாதுகாப்பதில் முதல்வரின் பங்கு குறித்தும் சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.