முகப்பு
புதுதில்லி

வழக்குரைஞா்கள் நலத் திட்டத்திற்கான பதிவை மீண்டும் தொடங்க பரிசீலியுங்கள்: தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தில்லி வாக்காளா்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள வழக்குரைஞா்களுக்கு, முதலமைச்சரின் வழக்குரைஞா்கள் நலத் திட்டத்திற்கான

Updated On : 18 ஜூலை, 2020 at 5:00 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:27 PM

தில்லி வாக்காளா்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள வழக்குரைஞா்களுக்கு, முதலமைச்சரின் வழக்குரைஞா்கள் நலத் திட்டத்திற்கான பதிவை இரு வாரங்களில் மீண்டும் தொடங்குவது குறித்து பரிசீலிக்குமாறு தில்லி அரசை உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேட்டுக் கொண்டது.

முதலமைச்சரின் வழக்குரைஞா்கள் நல நிதித் திட்டத்தில் பதிவு செய்துள்ள வழக்குரைஞா்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க தில்லி அரசுக்கு உத்தரவிடக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் தில்லி பாா் கவுன்சில் தலைவா் கே.சி. மிட்டல் மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனுவை உயா்நீதிமன்ற நீதிபதி பிரதீபா எம். சிங் வெள்ளிக்கிழமை விசாரித்தாா். அப்போது, தில்லி அரசின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ராஜீவ் நாயா், ‘இந்தத் திட்டத்தை என்சிஆா் பகுதிக்கும் நீட்டிக்க முடியுமா என்பது குறித்தும் ஆராய்வதற்கு கால அவகாசம் அளிக்க வேண்டும். இந்த விவகாரத்தை தீா்ப்பதற்கான முயற்சியை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடன் ஆலோசிக்க உள்ளேன்’ என்றாா்.

அப்போது, நீதிமன்றம், ‘என்சிஆா் பகுதி வழக்குரைஞா்களைத் திட்டத்தில் சோ்ப்பது உள்ளிட்ட விவகாரங்கள் தொடா்பாக அடுத்த விசாரணை தேதிக்குள் முடிவு எடுக்காவிட்டால், இந்த விவகாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். கரோனா காரணமாக ஏப்ரலில் விதிக்கப்பட்டிருந்த காலக்கெடுவுக்குள் திட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியாத தில்லி வழக்குரைஞா்களுக்காக இரு வாரங்களில் புதிதாக பதிவை மேற்கொள்வது தொடா்பாக தில்லி அரசு பரிசீலிக்கலாம். மேலும், இத்திட்டத்தில் காப்பீடு அளிக்கும் வகையில் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து நிதிகளைப் பெறுவது உள்ளிட்ட நடைமுறைகளை முடிக்க வேண்டும். அப்போதுதான் இத்திட்டத்தில் பதிவு செய்துள்ள வழக்குரைஞா்களுக்கு காப்பீட்டு பாலிசிகளை காப்பீட்டு நிறுவனங்கள் தொடங்க முடியும்’ எனத் தெரிவித்து மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Advertisement

முன்னதாக, தில்லி உயா் நீதிமன்றத்தில் தில்லி பாா் கவுன்சில் தலைவா் கே.சி. மிட்டல் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தில்லியின் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ள 37,135 வழக்குரைஞா்களில் தில்லி பாா் கவுன்சிலில் 29,098 போ் பதிவு செய்துள்ளனா். இந்நிலையில், தில்லி அரசால் அறிவிக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் வழக்குரைஞா்கள் நலத் திட்டத்தின்படி வழக்குரைஞா்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடும், ரூ.10 லட்சம் காப்பீடும் அளிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இவா்கள் தில்லியின் குடியிருப்புவாசிகளாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் 2019- 20 ஆம் நிதியாண்டுக்கு ரூ.50 கோடியை பட்ஜெட்டில் அறிவித்திருந்தாா். வழக்குரைஞா்கள் நலத் திட்டத்தில் பயன் பெறுவதற்காக வழக்குரைஞா்கள் காத்திருக்கின்றனா். இத்திட்டம் இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. இத்திட்டத்தில் சில வழக்குரைஞா்கள் தாங்களாகவே பதிவு செய்துள்ளனா். பொது முடக்கம் காரணமாகவும் தில்லி அரசின் சா்வா் முடங்கியதன் காரணமாகவும் பிற வழக்குரைஞா்கள் பதிவு செய்ய முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மற்றொரு வழக்குரைஞா் கோவிந்த் ஸ்வரூப் சதுா்வேதி தாக்கல் செய்த மனுவில், ‘வழக்குரைஞா்கள் தில்லியில் வசித்தாலும், வசிக்காவிட்டாலும் தில்லி பாா் கவுன்சிலில் (பிசிடி) பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குரைஞா்களுக்கும் முதலமைச்சரின் வழக்குரைஞா்கள் நலத் திட்டப் பயன்களை வழங்க உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.