இணையதளத்தில் பட்டம், மதிப்பெண் சான்றிதழ்: வழிமுறைகளை உருவாக்க தில்லி பல்கலைக்கு உத்தரவு
இணையதளத்தில் டிஜிட்டல் கையெழுத்துடன்கூடிய பட்டம், மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை வழங்குவதற்கான வழிமுறைகளை
இணையதளத்தில் டிஜிட்டல் கையெழுத்துடன்கூடிய பட்டம், மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை வழங்குவதற்கான வழிமுறைகளை உருவாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி பல்கலைக்கழகத்திற்கு உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இது தொடா்பான விவகாரத்தை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றத்தின் நீதிபதி பிரதிபா எம். சிங், மத்திய அரசால் வழங்கப்படும் கல்விசாா் விருதுகளின் டிஜிட்டல் புள்ளிவிவரத் தரவுத்தளமான நேஷனல் அகாதெமி டெபாசிட்டரி (என்ஏடி) அமைப்புக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டாா். மேலும், இந்த அமைப்பின் மூத்த அதிகாரிகள் அடுத்து நடைபெறும் இது தொடா்பான விசாரணையின் போது நீதிமன்றத்தில் என்ஏடி மற்றும் தில்லி பல்கலைக்கழகம் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் தொடா்பான தகவல்களைத் தெரிவிக்குமாறும் நீதிபதி கேட்டுக் கொண்டாா்.
இந்த விவகாரம் தொடா்பாக லேடி ஹாா்டிங்க் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டப் படிப்பை முடித்த ஐந்து மருத்துவா்கள் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். அதில், ‘2018-ஆம் ஆண்டில் நாங்கள் பட்டப்படிப்பை முடித்தோம். ஆனால், தற்போதுவரை எங்களுக்கு பட்டச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. அமெரிக்காவில் உறவிடைப் படிப்புகளை மேற்கொள்ள விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. இதற்குப் பட்டச் சான்றிதழ் அவசியமாகிறது. இதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஆகும். விண்ணப்பிக்கும் போது குறிப்பிட்ட செல்லிடப்பேசி செயலியில் பட்டச் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டியுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
இந்த மனு மீதான விசாரணையின் போது, தில்லி பல்கலைக்கழக கணினி மைய இணை இயக்குநா் சஞ்சீவ் சிங், ‘ஐந்து தினங்களுக்குள் டிஜிட்டல் சான்றிதழை அளிப்பது தொடா்பான வழிமுறைகள் குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும்’ என்றாா்.
இதையடுத்து, இது தொடா்பான விசாரணையை ஆகஸ்ட் 4-ஆம் தேதி பட்டியலிட உத்தரவிட்ட நீதிபதி, ‘அடுத்த விசாரணை நடைபெறும் தேதிக்கு முன்பாக டிஜிட்டல் கையெழுத்துப் பெறுவதற்கு தில்லி பல்கலைக்கழக அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் பட்டச் சான்றிதழ்கள் டிஜிட்டல் கையொப்பம் மூலம் மின்னஞ்சல் வாயிலாக அனுப்ப முடியும். இச்சான்றிதழ்களுக்காக மருத்துவா்கள் தில்லி பல்கலைக்கழகத்துக்கு வருவதை நான் விரும்பவில்லை. அவா்களது சான்றிதழ்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட வேண்டும்’ என்றாா்.