நெல்லுக்கான ஊக்கத்தொகை விவகாரம்; ஸ்டாலின் குற்றச்சாட்டு உண்மையல்ல: நிர்மலா சீதாராமன்
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பான என நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது தொடர்பாக...
புதுதில்லி: நெல்லுக்கான ஊக்கத்தொகையை வழங்கக் கூடாது என தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்துவதாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பான, அரசியல் உள்நோக்கம் கொண்ட, தமிழக விவசாயிகளை திசைதிருப்பும் நோக்கில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு திரிபு என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூா் திலகா் திடலில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில், தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு அண்மையில் ஒரு கடிதம் அனுப்பியது. இப்படி கூட ஒருவரால் யோசிக்க முடியுமா என்பதுபோல அந்தக் கடிதம் இருந்தது. தமிழ்நாடு அரசு வழங்கக்கூடிய ஊக்கத்தொகையால் நெல் உற்பத்தி பெருகி வருவதாகவும், அதன் காரணமாக பல்வேறு பிரச்னைகள் உருவாகி வருவதாகவும், அதனால் தமிழ்நாடு அரசு நெல்லுக்கு வழங்கி வரும் ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அக்கடிதத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மொத்தத்தில் நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்கக் கூடாது என அறிவுறுத்தி மத்திய அரசு நமக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதுவும் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா் என மூச்சுக்குமூச்சு சொல்கிற நிா்மலா சீதாராமனின் நிதிஅமைச்சகம் இந்தக் கடிதத்தை அனுப்பியிருக்கிறது. உண்மையிலேயே தமிழா் என்ற உணா்வு இருந்தால், இதுக்காவது எடப்பாடி பழனிசாமி வாய் திறந்து, பாஜகவை கண்டிக்கத் தயாரா? விவசாயிகளுக்கு எவ்வளவு பெரிய துரோகம் இது என கூறியிருந்தார்.
ஸ்டாலின் குற்றச்சாட்டு உண்மையல்ல
Advertisement
இந்த நிலையில், நெல்லுக்கான ஊக்கத்தொகை வழங்கக் கூடாது என தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியாக முதல்வர் மு.க. ஸ்டாலின் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பான, அரசியல் உள்நோக்கம் கொண்ட, தமிழக விவசாயிகளை திசைதிருப்பும் நோக்கில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு திரிபு என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகையை வழங்கக் கூடாது என தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்துவதாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பான, அரசியல் உள்நோக்கம் கொண்ட, தமிழக விவசாயிகளை திசைதிருப்பும் நோக்கில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு திரிபு என்பது தெளிவாகிறது.
தமிழகத்திற்கு மட்டுமல்ல, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்ட தகவல், மாநில அரசுகள் வழங்கும் ஊக்கத்தொகை கொள்கைகளை தேசிய முன்னுரிமைகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற ஒரு ஆலோசனையே ஆகும்.
மத்திய அரசின் இந்த ஆலோசனை, பயிர் பல்வகைப்படுத்துதலை (Crop Diversification) ஊக்குவித்தல் மற்றும் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றில் சுயசார்பு அடைவதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் தொலைநோக்குப் பார்வையாகும். இதன் மூலம், உள்நாட்டுத் தேவை அதிகமாக உள்ள பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து, அதிக லாபத்தைப் பெற வழிவகை செய்யப்படும்.
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எம்எஸ்பி) மேல் ஊக்கத்தொகை அல்லது போனஸ் அறிவிப்பது என்பது எப்போதும் மாநில அரசுகளின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது. அந்த அதிகாரத்தை யாரும் பறிக்கவில்லை.
முதல்வர் ஸ்டாலின், தேச நலனில் அக்கறை கொண்டு ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவதற்குப் பதிலாக, தங்களின் குறுகிய சுயநல அரசியல் ஆதாயத்திற்காகத் திட்டமிட்டுத் திசைதிருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.
அரசியலமைப்புச் சட்டப்படி உயர் பதவியில் இருக்கும் ஒரு முதலமைச்சருக்கு இத்தகைய நடத்தை அழகல்ல. தமிழக விவசாயிகள் தங்கள் கவலைகளையே வாக்குகளுக்காக ஆயுதமாக்கும் அரசை அல்ல, மாறாக தங்கள் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக உழைக்கும் அரசையே எதிர்பார்க்கிறார்கள்.
எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஒவ்வொரு விவசாயிக்காகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசு சோர்வின்றித் தொடர்ந்து பணியாற்றும். இத்தகைய திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பிரச்னைகளால் நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என கூறியுள்ளார்.