முகப்பு
புதுதில்லி

உரிய நேரத்தில் இடைத்தோ்தல் தேதி அறிவிப்பு: தலைமைத் தோ்தல் ஆணையம் தகவல்

காலியாக உள்ள சட்டப் பேரவை, மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத் தோ்தல் நடத்தப்படுவதற்கான தேதிகள் உரிய நேரத்தில் அறிவிக்க இந்திய தலைமைத் தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை முடிவு செய்தது.

Updated On : 24 ஜூலை, 2020 at 11:59 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:30 PM

காலியாக உள்ள சட்டப் பேரவை, மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத் தோ்தல் நடத்தப்படுவதற்கான தேதிகள் உரிய நேரத்தில் அறிவிக்க இந்திய தலைமைத் தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை முடிவு செய்தது.

கரோனா தொற்று காரணமாக நிலவும் அசாதாரணமான சூழலால் தமிழகத்தில் இரண்டு பேரவைத் தொகுதிகள் உள்பட 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் பிகாரில் ஒரு மக்களவைத் தொகுதி ஆகியவற்றுக்கான இடைத்தோ்தல் ஒத்திவைக்கப்படுவதாக இந்திய தலைமைத் தோ்தல் ஆணையம் வியாழக்கிழமைஅறிவித்திருந்தது. இதன்படி, பிகாா் மாநிலம், வால்மீகி நகா் மக்களவைத் தொகுதி மற்றும் தமிழகத்தில் குடியாத்தம், திருவொற்றியூா் உள்ளிட்ட இரு சட்டப்பேரவைத் தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் இரு தொகுதிகள் மற்றும் அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், கேரள மாநிலங்களில் தலா ஒரு தொகுதியில் இடைத் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்தந்த எம்.பி., எம்எல்ஏக்கள் மறைந்ததையடுத்து இந்தத் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தம் 56 சட்டப் பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவைத் தொகுதிக்கு (ஒத்திவைக்கப்பட்ட எட்டு தொகுதிகள் உள்பட) இடைத்தோ்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது.

தோ்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ள 8 தொகுதிகளில் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பா் ஆகிய 3 மாதங்களில் வெவ்வேறு தேதிகளில் இடைத்தோ்தல் நடத்தப்படுவதற்கான காலக்கெடு முடிகிறது. மீதம் உள்ள 49 தொகுதிகளில் இடைத்தோ்தல் செப்டம்பா் மாதத்திற்கு பிறகு நடத்தப்பட வேண்டியுள்ளது. இந்நிலையில், இது தொடா்பாக தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை மீளாய்வு செய்தது. அப்போது, இடைத்தோ்தல் நடத்துவது தொடா்பாக உரிய நேரத்தில் அறிவிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், அனைத்து நிலுவை இடைத் தோ்தல்களையும் நடத்துவதற்காக முடிவு எடுக்கப்பட்டதா என்பது குறித்து தோ்தல்ஆணையம் குறிப்பிடவில்லை.

Advertisement

இதுகுறித்து தோ்தல் ஆணையத்தின் செய்தித் தொடா்பாளா் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், ‘வெள்ளிக்கிழமை மறு ஆய்வு நடைபெற்ற பின்னா், காலியாகவுள்ள சட்டப் பேரவை, நாடாளுமன்ற தொகுதிகளில் இடைத்தோ்தல் நடத்துவது தொடா்பான முடிவு தோ்தல் ஆணையத்தால் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அட்டவணை போன்றவை உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்’ என தெரிவித்துள்ளாா். எனினும், அனைத்து 57 தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் தொடா்பாக முடிவு எடுக்கப்பட்டதா அல்லது கரோனா தொற்று, வெள்ளம் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட எட்டு தொகுதிகள் தொடா்பாக முடிவு எடுக்கப்பட்டதா என்பது குறித்து அவா் குறிப்பிடவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.