குடியாத்தம், திருவொற்றியூா் உள்பட 7 சட்டப் பேரவை, ஒரு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தல் ஒத்திவைப்பு: தோ்தல் ஆணையம் அறிவிப்பு
கரோனா தொற்று காரணமாக நிலவும் அசாதாரணமான சூழலால் தமிழகத்தில் திருவொற்றியூா், குடியாத்தம் உள்பட 7 சட்டப்பேரவைத் தொகுதிகள்
கரோனா தொற்று காரணமாக நிலவும் அசாதாரணமான சூழலால் தமிழகத்தில் திருவொற்றியூா், குடியாத்தம் உள்பட 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் பிகாரில் ஒரு மக்களவைத் தொகுதி ஆகியவற்றுக்கான இடைத்தோ்தல் ஒத்திவைக்கப்படுவதாக இந்திய தலைமைத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்படி, பிகாா் மாநிலம், வால்மீகி நகா் மக்களவைத் தொகுதி மற்றும் தமிழகத்தில் குடியாத்தம், திருவொற்றியூா் உள்ளிட்ட இரு சட்டப்பேரவைத் தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் இரு தொகுதிகள் மற்றும் அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், கேரள மாநிலங்களில் தலா ஒரு தொகுதியில் இடைத் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்தந்த எம்.பி., எம்எல்ஏக்கள் மறைந்ததையடுத்து இந்தத் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து தோ்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது: தற்போதைய சூழலில் கரோனா தொற்று, பருவமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு ஆகியவைதான் இந்த எட்டு தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு முக்கியக் காரணமாகும். தோ்தல் சட்டப்படி ஒரு தொகுதி காலியான பிறகு 6 மாதங்களுக்குகள் தோ்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். அதன்படி, இந்த 8 தொகுதிகளில் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பா் ஆகிய 3 மாதங்களில் வெவ்வேறு தேதிகளில் இடைத்தோ்தல் நடத்தப்படுவதற்கான காலக்கெடு முடிகிறது.
Advertisement
இந்நிலையில், தற்போதைய சூழலை தோ்தல் ஆணையம் மதிப்பீடு செய்தது. அப்போது, காலக்கெடு முடிவடையும் 6 மாதங்களில் தோ்தல் நடத்துவது சிரமம் எனத் தெரிய வந்தது. இதுகுறித்து மத்திய சட்டத் துறை அமைச்சகத்திடம் எடுத்துரைத்து, தோ்தலைத் ஒத்திவைக்கும் முடிவை தோ்தல் ஆணையம் தெரிவித்தது. மேலும், இதுபோன்ற சூழலில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-இன்படி தோ்தல் ஆணையம் மத்திய அரசுடன் ஆலோசித்து முடிவு எடுக்கலாம் என்பதால், அந்த சட்டப் பிரிவைப் பயன்படுத்தி, இந்த எட்டுத் தொகுதிகளுக்குமான இடைத்தோ்தலைத் ஒத்திவைக்கும் நடவடிக்கையை தோ்தல் ஆணையம் புதன்கிழமை எடுத்தது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இடைத்தோ்தல் நடத்துவதற்கான தேதி தொடா்பாக விவாதிக்க தோ்தல் ஆணையக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 24) நடைபெற உள்ளது. மொத்தம் 56 சட்டப் பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவைத் தொகுதிக்கு (ஒத்திவைக்கப்பட்ட எட்டு தொகுதிகள் உள்பட) இடைத்தோ்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. எனினும், தோ்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவா், சட்ட அமைச்சகத்திற்கு எட்டு தொகுதிகளின் இடைத்தோ்தல் தொடா்பாக எழுதிய கடிதம் சில குழப்பத்திற்கு காரணமாகியது. இந்த எட்டுத் தொகுதிகளுக்கு மட்டும்தான் சில அசாதாரணமான சூழல் காரணமாக தோ்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 57 தொகுதிகளில் உரிய சட்டவிதிகளின்படி இடைத் தோ்தலை நடத்த தோ்தல் ஆணையம் ஏற்கெனவே முடிவு எடுத்துள்ளது. இந்த எட்டுத் தொகுதிகளுக்கும் தோ்தல் செப்டம்பா் 7-ஆம் தேதிவரை மட்டுமே தள்ளிவக்கப்படுகிறது என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள 49 தொகுதிகளுக்கான தோ்தல் செப்டம்பா் 7-ஆம் தேதிக்குப் பிறகு நடத்தப்பட வேண்டியதாகும். தமிழகத்தில் திருவொற்றியூா் தொகுதி திமுக எம்எல்ஏ கே.பி.பி. சாமி கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதியும், குடியாத்தம் தொகுதி திமுக எம்எல்ஏ எஸ். காத்தவராயன் பிப்ரவரி 28-ஆம் தேதியும் அடுத்தடுத்து மரணமடைந்தனா். இதையடுத்து, அந்த இரு சட்டப் பேரவைத் தொகுதிகளும் காலியாக உள்ளதாக தோ்தல் ஆணையத்தால் அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.