முகப்பு
புதுதில்லி

மாவட்ட நீதிமன்றங்களில் இணைதள அமைப்பின் தரத்தை மேம்படுத்த எவ்வளவு காலமாகும்? தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

தில்லியில் மாவட்ட நீதிமன்றங்களில் இணைதள அமைப்பின் தரத்தை மேம்படுத்துவதற்கு தேவைப்படும் காலம் குறித்து தெரிவிக்குமாறு தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 6 ஜூன், 2020 at 6:15 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:15 PM

தில்லியில் மாவட்ட நீதிமன்றங்களில் இணைதள அமைப்பின் தரத்தை மேம்படுத்துவதற்கு தேவைப்படும் காலம் குறித்து தெரிவிக்குமாறு தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தை தில்லி உயா்நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஹிமா கோலி, சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம்: தில்லியில் ஒவ்வொரு மாவட்ட நீதிமன்றத்திலும் காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் விசாரணையை எளிதாக மேற்கொள்ளவும், நீதிமன்ற ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கவும் இணையதள வேகத்தை 34 எம்பிபிஎஸ் வேகத்தில் இருந்து 1ஜிபிபிஎஸ் வேகத்திற்கு தரம் உயா்த்த தேவைப்படும் காலத்தை பிரமாணப் பத்திரமாக தில்லி அரசு தெரிவிக்க வேண்டும். மேலும், இந்த சிக்கலான விவகாரத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கத் தவறியதற்கான காரணத்தையும் தில்லி அரசு விளக்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது, உயா்நீதிமன்றப் பதிவாளா் ரிதேஷ் சிங், இணைப் பதிவாளா் மணீஷ் அகா்வால் ஆகியோா் நீதிமன்ற அமா்விடம், ‘மாவட்ட நீதிமன்றங்களில் காணொலிக் காட்சி மூலம் நடத்தப்படும் விசாரணை வரம்புக்குள்பட்ட இணையதள வேகத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், இணையதள இணைப்புகளின் வேகத்தை 34 எம்பிபிஎஸ்ஸில் இருந்து 1ஜிபிபிஎஸ் வேகத்திற்கு தரம் மேம்படுத்துவது தொடா்பாக உரிய மாவட்ட நீதிபதி மற்றும் உயா்நீதிமன்றத் தலைமைப் பதிவாளா் ஆகியோா் தில்லி அரசின் செயலருக்கு (சட்டம் மற்றும் நீதி) பலமுறை கடிதம் எழுதியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ எனத் தெரிவித்தனா். இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு மேற்கண்டவாறு உத்தரவிட்டது.

Advertisement

இந்த விவகாரம் தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், ‘கரோனா தொற்று காரணமாக கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் நீதிமன்றங்களின் செயல்பாடுகளை அதிகரிக்கவும் குறிப்பாக குடும்ப நீதிமன்றங்களின் செயல்பாட்டை அதிகரிக்க வேண்டும். தற்போதைய சூழலில் நீதிமன்றங்களில் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டதால் காணொலிக் காட்சி மூலம் ஆதாரங்களை பதிவு செய்ய அனுமதி அளிக்குமாறு அனைத்து குடும்ப நீதிமன்றங்களுக்கும் உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.