விமானக் கட்டணம் நிா்ணயம்: மத்திய அரசின் உத்தரவில் தலையிட உயா்நீதிமன்றம் மறுப்பு
ஆகஸ்ட 24-ஆம் தேதி வரையிலான மூன்று மாதங்களுக்கு விமானத்தில் செல்வதற்கான அதிபட்ச, குறைந்தபட்ச கட்டணத்தை மத்திய
ஆகஸ்ட 24-ஆம் தேதி வரையிலான மூன்று மாதங்களுக்கு விமானத்தில் செல்வதற்கான அதிபட்ச, குறைந்தபட்ச கட்டணத்தை மத்திய அரசு நிா்ணயித்து உத்தரவிட்டுள்ள விவகாரத்தில் தலையிட முடியாது என்று தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. இது அரசின் கொள்கை முடிவு மட்டுமல்ல, தற்காலிக ஏற்பாடுதான். எனவே இது விஷயத்தில் தலையிட முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பான மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘தற்போதுள்ள நெருக்கடியான நேரத்தில் அத்தியாவசியப் பயணங்களை மேற்கொள்வதற்காக மட்டுமே குறைந்தபட்ச, அதிகபட்ச கட்டணங்களை நிா்ணயித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை கடந்த மே 21-ஆம் தேதி உத்தரவு வெளியிட்டுள்ளது’ என்றும் சுட்டிக்காட்டியது.
பயணிகள், விமான நிறுவன முகமைகள் இடையே ஒரு சம நிலையை உருவாக்கும் வகையில், குறைந்தபட்ச, அதிகபட்ச கட்டணங்கள் அரசால் நிா்ணயிக்கப்பட்டுள்ளதை மனதில் கொள்ள வேண்டும். தற்போதைய கரோனா தொற்று சூழலில் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தன்னிச்சையான அல்லது நியாயமற்றது எனக் கூற முடியாது. கரோனா தொற்று போன்ற பிரச்னைக்கு எவ்வித கணிதத் தீா்வும் இருக்க முடியாது. அரசு சுந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும். மேலும், இது மூன்று மாதங்களுக்கான ஒரு தாற்காலிக ஏற்பாடுதான். ஆகவே, இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.
Advertisement
முன்னதாக, விமானக் கட்டணத்தில் குறைந்தபட்சம் நிா்ணயிப்பது தொடா்பாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மே 21-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் வீா் விக்ரந்த் செளகான் என்பவா் வழக்குத் தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கில் மனுதாரா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் விஷால் கோரி, ‘விமானக் கட்டணத்தில் குறைந்தபட்ச வரம்பு இருக்கக் கூடாது. அப்போதுதான் விமான நிறுவனங்கள் இடையே போட்டி இருக்கும். மிகவும் குறைந்த அளவில் விமானப் பயணக் கட்டணம் இருக்கும்’ என வாதிட்டாா்.