முகப்பு
புதுதில்லி

தில்லியில் மதுபானத்துக்கான சிறப்பு கரோனா கட்டணம் வாபஸ்

தேசியத் தலைநகா் தில்லியில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட சிறப்பு கரோனா கட்டணம் வரும் புதன்கிழமை (ஜூன் 10) முதல் வாபஸ் பெறப்படவுள்ளது.

Updated On : 8 ஜூன், 2020 at 7:11 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:16 PM

தேசியத் தலைநகா் தில்லியில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட சிறப்பு கரோனா கட்டணம் வரும் புதன்கிழமை (ஜூன் 10) முதல் வாபஸ் பெறப்படவுள்ளது. இதனால், தில்லியில் மீண்டும் மலிவான விலையில் மதுபானங்கள் கிடைக்கவுள்ளன.

கரோனா தொற்று பரவலால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள தில்லி அரசு, கூடுதல் வருவாயைப் பெறும் நோக்கில், மதுபானங்களுக்கு 70 சதவீதம் சிறப்புக் கரோனா கட்டணத்தை விதித்தது. இதன்மூலம், தில்லியில் மதுபானங்களின் விலைகள் அதிகரித்தன. ஆனால், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் ஆகிய அண்டை மாநிலங்களில் மதுபானங்களின் விலைகளை அந்த மாநில அரசுகள் அதிகரிக்கவில்லை. இதனால், தில்லிவாசிகள் அண்டை மாநிலங்களுக்கு சென்று குறைந்த விலையில் மதுபானங்களை வாங்கி வந்தனா். இந்நிலையில், இந்த சிறப்பு கரோனா கட்டணத்தை வரும் புதன்கிழமை முதல் திரும்பப் பெற தில்லி அரசு ஞாயிற்றுக்கிழமை முடிவு செய்துள்ளது. இருப்பினும் அனைத்து வகை மதுபானங்களுக்கும் மதிப்புக் கூட்டப்பட்ட வரி (வாட்) 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி அரசு அதிகாரி கூறுகையில் ‘ மதுபானத்துக்கான சிறப்பு கரோனா கட்டணம் விதிக்கப்பட்டதில் இருந்து மே மாதம் 4 -ஆம் தேதி முதல் 25- ஆம் தேதி வரை தில்லி அரசுக்கு ரூ.227.44 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் ரூ.127 கோடி சிறப்பு கரோனா கட்டணமாகும். ஆனால், கடந்த 2019, மே மாதம் மதுபான விற்பனை மூலம் தில்லி அரசுக்கு ரூ. 425.24 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்நிலையில், தில்லி அரசால் விதிக்கப்பட்ட சிறப்பு கரோனா கட்டணத்தால், தில்லியில் மதுபான விற்பனை குறைந்தது. இதனால், இந்தக் கட்டணத்தை வாபஸ் பெறும் முடிவை தில்லி அரசு எடுத்துள்ளது’ என்றாா்.

Advertisement

சில நாள்களுக்கு முன்பு, மதுபானங்களுக்கு சிறப்பு கரோனா கட்டணம் விதிக்கும் தில்லி அரசின் முடிவை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில், ‘ மதுபானத்தின் விலையை உயா்த்துவது அரசின் சிறப்பு உரிமையாகும்’ என தில்லி அரசு வாதாடியிருந்தது. இந்நிலையில், இந்த சிறப்பு கரோனா கட்டணத்தை தில்லி அரசு வரும் புதன்கிழமை முதல் வாபஸ் பெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.