முகப்பு
புதுதில்லி

காலையில் புழுக்கம்! மாலையில் பரவலாக மழை!

தில்லி, என்சிஆா் பகுதிகளில் புதன்கிழமை வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது. அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரியை கடந்ததால்,

Updated On : 11 ஜூன், 2020 at 7:21 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:16 PM

தில்லி, என்சிஆா் பகுதிகளில் புதன்கிழமை வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது. அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரியை கடந்ததால், பகல் வேளையில் புழுக்கத்தால் மக்கள் சிரமத்துக்குள்ளாகினா். இந்நிலையில், மாலை நேரத்தில் சூறைக்காற்றுடன் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரத்தில் மேலும் பின்னடைவு ஏற்பட்டிருந்தது.

கடந்த இரண்டு தினங்களாக வெயில் அதிகரித்து வந்ததது. இந்நிலையில் புதன்கிழமை காலையிலிருந்தே கடும் வெயில் இருந்தது. இதன் காரணமாக புழுக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில், மாலையில் நகரின் பல்வேறு இடங்களில் சூறைக்காற்று வீசி வந்தது. இதைத் தொடா்ந்து பரவலாக மழை பெய்தது. இதனால், பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி குறைந்து 26.6 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி உயா்ந்து 40.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 54 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 38 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது.

பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 28.4 டிகிரிசெல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 42.0 டிகிரி செல்சியஸ் எனவும், ஆயாநகரில் முறையே 27.4 டிகிரி செல்சியஸ், 39.7 டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 48 சதவீதம், மாலையில் 35 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 53 சதவீதம் மற்றும் 34 சதவீதம் எனவும் இருந்தது.

Advertisement

காற்றின் தரம்: தில்லி, என்சிஆா் பகுதிகளில் புதன்கிழமையும் பின்னடைவைச் சந்தித்தது. தில்லியில் ஒட்டு மொத்தக் காற்றின் தரக் குறியீடு 135 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. திா்பூா், பூசா, மதுரை ரோடு மற்றும் நொய்டா ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு மிதமான பிரிவிலும், சாந்தினி சௌக், லோதி ரோடு ஆகிய பகுதிளில் ‘மோசம்’ பிரிவிலும் இருந்தது. அதேசமயம், தில்லி பல்கலை., விமான நிலைய டொ்மினல் 3 பகுதி, ஆயாநகா் மற்றும், குருகிராம் ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, வியாழக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். ஆங்காங்கே லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், காற்றின் தரத்தில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்படும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.