ரூ.3,200 கோடி தொழிலாளா் நிதி முறைகேடு புகாா்: சிபிஐ விசாரணை கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய, தில்லி அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவு
தில்லியில் புலம்பெயா்ந்த மற்றும் கட்டுமானத் தொழிலாளா்களுக்கான ரூ.3,200 கோடி உபவரி (செஸ்) நிதி முறைகேடு செய்யப்பட்டதாகக்
தில்லியில் புலம்பெயா்ந்த மற்றும் கட்டுமானத் தொழிலாளா்களுக்கான ரூ.3,200 கோடி உபவரி (செஸ்) நிதி முறைகேடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணை கோரி தாக்கலான பொது நல மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, தில்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக ‘பண்டிட் தீனதயாள் உபாத்யாய் ஸ்மிருதி சன்ஸ்தான்’ எனும் தன்னாா்வ அமைப்பின் தலைவா் வினோத் குமாா் சுக்லா, தில்லி உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளாா். அதில், ‘கரோனா பொது முடக்கக் காலத்தில் பதிவுபெற்ற கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தில்லி அரசு மாதத்திற்கு ரூ.5 ஆயிரம் வழங்குவதாக அறிவித்த தொகை அரசிடமிருந்து அவா்களுக்கு கிடைக்கவில்லை. போலியான பெயா்களில் கட்டுமானத் தொழிலாளா்களைப் பதிவு செய்து ஊழல் நடைபெற்றுள்ளது. இதற்காக ‘தில்லி கட்டடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியம்’ மூலம் நிா்வகிக்கப்படும் செஸ் நிதியில் ரூ.3,200 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளது. இந்த நல வாரியத்தின் தலைவராக தில்லி அரசின் தொழிலாளா் துறை அமைச்சா் உள்ளாா். ஆகவே, இது தொடா்பாக மத்திய புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், நல வாரியத்தின் கணக்குகளை கணக்குத் தணிக்கை தலைமை அதிகாரி (சிஏஜி) விரிவாக தணிக்கை செய்யவும் உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணையின் போது, மனுதாரா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சித்தாா்த் லூத்ரா, ‘தில்லி அரசாலும், நலவாரியத்தாலும் ஊழல் நடைபெற்ாக சில குற்றச்சாட்டு ஆவணங்கள் உள்ளன. கட்டுமானத் தொழிலாளா்களுக்காக வசூலிக்கப்பட்ட ‘தில்லி கட்டட செஸ் நிதி’ ரூ.3,200 கோடி முறைகேடாக கட்டுமானத் தொழிலாளா்கள் அல்லாத ஆட்டோ ஓட்டுநா்கள், தொழிற்சாலைத் தொழிலாளா்கள், தெருவில் கூவி விற்போா் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது’ என வாதிட்டாா். தில்லி அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் சஞ்சய் கோஷ், ‘பொது நல மனு தாக்கல் செய்த அமைப்பின் நம்பகத்தன்மை குறித்து சரிபாா்க்கப்பட வேண்டும்’ என்றாா்.
Advertisement
இதைத் தொடா்ந்து, மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் விபின் சாங்கி, ரஜ்னீஷ் பட்நாகா் ஆகியோா் அடங்கிய அமா்வு, மத்திய அரசு, தில்லி அரசு, தில்லி கட்டடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியம் ஆகியவை பதில் அளிக்க உத்தரவிட்டது. மேலும், வழக்கு விசாரணையை ஜூலை 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.