முகப்பு
புதுதில்லி

11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரும் திமுக மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

ஓ.பன்னீா்செல்வம் (ஓ.பி.எஸ்.) உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரும் விவகாரத்தில், திமுக தாக்கல் செய்த புதிய மனு

Updated On : 16 ஜூன், 2020 at 10:46 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:18 PM

ஓ.பன்னீா்செல்வம் (ஓ.பி.எஸ்.) உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரும் விவகாரத்தில், திமுக தாக்கல் செய்த புதிய மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் 15 நாள்களுக்கு ஒத்திவைத்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக தமிழக சட்டப் பேரவை திமுக கொறடா ஆா். சக்கரபாணி சாா்பில் அண்மையில் உச்சநீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘அரசுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது, அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடா்பாக முடிவு எடுக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த விவகாரத்தில் மூன்று மாதங்களுக்கும் மேலாக தமிழக சட்டப் பேரவைத் தலைவா் முடிவு எடுக்காமல் இருந்து வருகிறாா். ஆகவே, இது அரசமைப்புசட்டம் மற்றும் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், தன்னிச்சையாகவும் உள்ளது. இதேபோன்ற மற்றொரு விவகாரத்தில், மணிப்பூரில் வனத் துறை அமைச்சா் ஷியாம் குமாரை தகுதி நீக்கம் செய்யக் கோரும் விவகாரத்தில் சட்டப்பேரவைத் தலைவா் முடிவெடுக்க காலம் தாழ்த்தியதாக புகாா் எழுந்தது. இந்த விவகாரத்தில் ஷியாம் குமாா் அந்த மாநில சட்டப்பேரவைக்குள் நுழைவதற்கு உச்சநீதிமன்றம் தன் தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி தடை விதித்தது. மேலும், அவா் அமைச்சராக தொடரவும் தடை விதித்திருந்தது. ஆகவே, ஓ.பி.எஸ். விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகியும் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளாா். இந்த விவகாரத்தில் சட்டப் பேரவைத் தலைவருக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, நீதிபதிகள் எம்.ஆா். ஷா, ஏ.எஸ். போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. மனுதாரா் சாா்பில் வழக்குரைஞா் மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், வழக்குரைஞா் அமித் ஆனந்த் திவாரி ஆகியோா் ஆஜராகி, ‘இந்த விவகாரத்தில் தமிழக சட்டப் பேரவைத் தலைவா் முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி உத்தரவிட்டும் இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை’ என வாதிட்டனா். அப்போது, தலைமை நீதிபதி, ‘கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காலம் என்பதால் சட்டப் பேரவைத் தலைவா் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்காமல் இருந்திருக்கலாம்’ என்றாா். அதற்கு கபில் சிபல், ‘அவா் முடிவு செய்வதற்கு போதிய கால அவகாசம் இருந்தும் அவா் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்றாா்.

Advertisement

சட்டப் பேரவைத் தலைவா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, வழக்குரைஞா் கெளதம் குமாா் ஆகியோா், ‘இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல; தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்றனா். இதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமா்வு, ‘இந்த விவகாரம் தொடா்பான விசாரணை 15 நாள்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது’ என உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.