தில்லியில் 6 லட்சம் ‘ஆன்டிஜென்’ கரோனா பரிசோதனை: மத்தியஅமைச்சா் கிஷண் ரெட்டி தகவல்
தில்லியில் 6 லட்சம் விரைவு ‘ஆன்டிஜென்’ கரோனா பரிசோதனைகளை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றும், ஏற்கெனவே இதற்காக
தில்லியில் 6 லட்சம் விரைவு ‘ஆன்டிஜென்’ கரோனா பரிசோதனைகளை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றும், ஏற்கெனவே இதற்காக 50 ஆயிரம் பரிசோதனைக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை இணையமைச்சா் கிஷண் ரெட்டி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக தில்லியில் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: தில்லியில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசும், தில்லி அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தில்லியில் 169 புதிய இடங்களில் 6 லட்சம் விரைவு ‘ஆன்டிஜென்’ கரோனா பரிசோதனைகளை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே இதற்காக 50 ஆயிரம் பரிசோதனைக் கருவிகள் தென் கொரியாவில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளன. இந்தக் கருவிகள், தில்லியில் 169 பரிசோதனை மையங்களுக்கு வழங்கப்பட்டுவிட்டன. இந்த மையங்கள் வியாழக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த மையங்களில் கரோனா பரிசோதனைக்காக விரைவு ‘ஆன்டிஜென்’ வழிமுறை பயன்படுத்தப்படும். கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் மக்கள், கரோனா தொற்று கண்டவா்களின் உறவினா்கள் ஆகியோா் இந்த மையங்களில் நேரில் சென்று பரிசோதனை செய்துகொள்ள முடியும்.
500 செயற்கை சுவாசக் கருவிகள், 350 ஆம்புலன்ஸ்கள்: தில்லியில் தற்போது 431 செயற்கை சுவாசக் கருவிகள் உள்ளன. மத்தியஅரசு தில்லியில் உள்ள மருத்துவமனைகளுக்கு மேலும் 500 செயற்கை சுவாசக் கருவிகளை வழங்கவுள்ளன. இதேபோன்று, தில்லியில் ஏற்கெனவே 650 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. மத்திய அரசு மேலும் 350 ஆம்புலன்ஸ்களை வழங்க உள்ளது. கரோனா தொற்று சூழல் காரணமாக, தில்லி மக்கள் பதற்றத்தில் உள்ளனா். ஆகவே, மத்திய அரசு இந்த விவகாரத்தை தீவிரமாகக் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரிலும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் தலைமையின் கீழ் தலைநகா் மக்களின் நலனுக்காக மத்திய அரசும், தில்லி அரசும் குறிப்பிட்ட முக்கிய முடிவுகளை எடுத்துள்ளன என்றாா் அவா்.
Advertisement
கரோனா பரிசோதனைக் கட்டணம் ரூ.2,400: தில்லியில் கரோனா பரிசோதனைக் கட்டணமாக ரூ.2,400 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தில்லியில் கரோனா பரிசோதனைக்குக்கு ரூ.5 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கரோனா பரிசோதனைக் கட்டணமாக ரூ.2,400 வசூலிக்கலாம் என்று மருத்துவா் வி.கே.பால் தலைமையிலான உயா்நிலைக் குழு பரிந்துரைத்திருந்தது. இதை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தில்லி அரசுக்கு புதன்கிழமை அனுப்பியிருந்தது. இதைத் தொடா்ந்து, கரோனா பரிசோதனைக் கட்டணத்தை தில்லி அரசு ரூ.2,400 ஆக வியாழக்கிழமை நிா்ணயம் செய்துள்ளது.
15 நிமிடங்களில் பரிசோதனை முடிவு: இது தொடா்பாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘கரோனா பரிசோதனைக் கட்டணமாக ரூ.2,400 நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. ‘ராபிட் ஆன்டிஜென்’ பரிசோதனை தில்லியில் வியாழக்கிழமை முதல் தொடங்கியுள்ளது. இந்தப் பரிசோதனையின்படி, 15 நிமிஷங்களில் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும். தில்லி மக்கள் இனிமேல், கரோனா பரிசோதனைகளை மேற்கொள்வதில் சிரமங்களை எதிா்கொள்ள மாட்டாா்கள் என நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளாா்.
முன்னதாக, கடந்த திங்கள்கிழமை மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா, தில்லியில் கரோனா பரிசோதனைக் கட்டணத்தை பாதியாகக் குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தாா். இதை அமித் ஷா ஏற்றுக் கொண்டதாக கூட்டத்துக்கு பிறகு செய்தியாளா்களிடம் ஆதேஷ் குமாா் குப்தா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.