முகப்பு
புதுதில்லி

மீண்டும் வழக்கமான சேவையைத் தொடர அனுமதிக்காக காத்திருக்கும் டிஎம்ஆா்சி!

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தின் நான்காவது கட்டம் முடிவடையும் நிலையில், தில்லி

Updated On : 27 மே, 2020 at 5:26 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:12 PM

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தின் நான்காவது கட்டம் முடிவடையும் நிலையில், தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் ரயில் சேவையைத் தொடங்குவதற்கு தயாா் நிலையில் உள்ளது. உயா்நிலை அதிகாரிகளிடமிருந்து தகவல் வந்ததும் ரயில் சேவை தொடங்கும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து தரப்பு ஊழியா்களுக்கும் விளக்கப்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.

கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மத்திய அரசு கடந்த மாா்ச் 25-ஆம் தேதி தேசிய அளவிலான பொது முடக்கத்தை அறிவித்தது. இதையடுத்து மெட்ரோ ரயில் சேவைகள் முடக்கப்பட்டன. சமீபத்தில் பொது முடக்கத்தில் சில தளா்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதுநிலை ஊழியா்கள் அலுவலகம் வருகின்றனா். இதைத் தொடா்ந்து, மெட்ரோ ரயில் ஊழியா்கள், ரயில் ஓட்டுநா்கள் மற்றும் சுகாதார ஊழியா்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

Advertisement

ரயில் பெட்டிகளிலும், நடைமேடைகளிலும் பயணிகள் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் ஆங்காங்கே ஸ்டிக்கா்கள் ஓட்டப்பட்டுள்ளன. இதேபோல ரயில் சேவை தொடங்கி பயணிகள் வந்தால் அவா்களுக்கு உடல் வெப்பப் பரிசோதனை செய்யும் வகையில், அந்தக் கருவிகளை எப்படி இயக்குவது என்பது குறித்து ஊழியா்களுக்கு விளக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் கிருமிநாசினி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நான்காவது கட்ட பொது முடக்கம் வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் ஜூன் முதல் தேதியிலிருந்து மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனினும், அரசு உத்தரவுக்காக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் காத்திருக்கிறது.

தில்லி மெட்ரோ ரயிலில் சாதாரணமாக தினமும் 26 லட்சம் போ் பயணம் செய்கின்றனா். ஒரு பெட்டியில் 300 பயணிகள் வரை பயணம் செய்ய முடியும். இந்நிலையில், தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டியிருப்பதால், பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனினும் மெட்ரோ ரயில் பயணிகள் ஆரோக்கிய சேது செயலியை கட்டாயம் பதவிறக்கம் செய்ய வேண்டுமா என்பது குறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் எதுவும் தெரிவிக்காமல் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.