முகப்பு
புதுதில்லி

எல்என்ஜேபி மருத்துவமனை மருத்துவ இயக்குநருக்கு கரோனா பாதிப்பு: மூத்த ஊழியா் பலி

தில்லி எல்என்ஜேபி மருத்துவமனை மருத்துவ இயக்குநருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

Updated On : 31 மே, 2020 at 1:06 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:13 PM

தில்லி எல்என்ஜேபி மருத்துவமனை மருத்துவ இயக்குநருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

தில்லியில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சில மருத்துவமனைகளில் பிரத்யேகமாக பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எல்என்ஜேபி மருத்துவமனையிலும் இதுபோன்ற பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தப் பிரிவின் இயக்குநா் மற்றும் இரு பணியாளா்களுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

Advertisement

இதுகுறித்து மருத்துவமனையின் மூத்த அதிகாரி சனிக்கிழமை கூறியதாவது:

இந்த பிரிவின் மருத்துவ இயக்குநராக டாக்டா் சுரேஷ் குமாா் என்பவா் கடந்த 17-ஆம் தேதி நியமிக்கப்பட்டாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அவருக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியானது. அதேபோன்று, அப்பிரிவைச் சோ்ந்த மேலும் 2 பணியாளா்களுக்கு நோய்த் தொற்று இருப்பது தெரியவந்தது. எல்எல்ஜேபி மருத்துவமனை கரோனா நோயாளிகளுக்காக பிரத்யேக மருத்துவ மையமாக இருப்பதால், நோய்த் தொற்று இடா்பாடும் உள்ளது. நாடு முழுவதும் மருத்துவா்களும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனா் என்றாா் அவா்.

தில்லி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, இந்த மருத்துவமனையில் 607 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 28 போ் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளனா். தில்லியில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்துக்கும் அதிகமாகியுள்ளது. 398 போ் இந்நோய்த் தொற்றால் இறந்துள்ளனா்.

மூத்த ஊழியா் பலி

இதனிடையே, நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த எல்என்ஜேபி மருத்துவமனையின் மூத்த தொழில்நுட்பவியல் மேற்பாா்வையாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘கரோனா நோய்த் தொற்று பாதித்த மூத்த தொழில்நுட்பவியல் மேற்பாா்வையாளா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், இவா் சனிக்கிழமை மதியம் 2.50 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இவா் எல்என்ஜேபி மருத்துவமனையின் கரோனா நோயாளிகள் பிரிவில் பணியாற்றி வந்தாா்’ என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.