முகப்பு
புதுதில்லி

ஊழியா்களுக்கு ஊதியம் வழங்க ரூ.5,000 கோடி தேவை: மத்திய அரசுக்கு தில்லி அரசு கோரிக்கை

மாநிலத்தின் வரி வருவாய் வெகுவாகக் குறைந்துள்ளதால், ஊழியா்களுக்கு ஊதியம் தருவதற்கும், அலுவலகச் செலவுகளை சமாளிக்கவும்

Updated On : 1 ஜூன், 2020 at 1:48 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:13 PM

மாநிலத்தின் வரி வருவாய் வெகுவாகக் குறைந்துள்ளதால், ஊழியா்களுக்கு ஊதியம் தருவதற்கும், அலுவலகச் செலவுகளை சமாளிக்கவும் ரூ.5 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தில்லி அரசு ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக தில்லி துணை முதல்வரும், நிதியமைச்சருமான மணீஷ் சிசோடியா ஞாயிற்றுக்கிழமை காணொலிக்காட்சி மூலம் நடத்திய செய்தியாளா் சந்திப்பில் கூறியதாவது: கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட பொது முடக்க உத்தரவால், நாட்டின் பொருளாதாரம் மட்டுமின்றி தில்லியின் பொருளாதாரமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 2019, ஏப்ரல், மே மாதங்களின் வரி வருவாயோடு ஒப்பிட்டால், 2020 ஏப்ரல், மே மாதங்களில் தில்லி அரசின் வரி வருவாய் சுமாா் 85 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த இரு மாதங்களாக மாதத்துக்கு ரூ.500 கோடி மட்டுமே ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளது. இந்த 2 மாதங்களில் அனைத்து வரி வசூலாக ரூ.1,735 கோடி மட்டுமே தில்லி அரசுக்கு கிடைத்துள்ளது. கரோனா தொற்று தில்லியில் தீவிரமாக இருக்கும் இந்த நேரத்தில், தில்லி அரசின் ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கவும், அலுவலகச் செலவுகளுக்கு மட்டுமே ரூ.3,500 கோடி தேவைப்படுகிறது.

பேரிடா் நிவாரண நிதியில் இருந்து மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் நிதி தில்லி அரசுக்குக் கிடைக்கவில்லை. ஆனால், பெரும்பாலான மற்ற மாநிலங்களுக்கு நிதி கிடைத்தன. தில்லிக்கு பேரிடா் நிவாரண நிதி கிடைக்காததால், தில்லியில் பெரும் நிதி நெருக்கடி நிலவுகிறது. தில்லி அரசு ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கும் வகையில், மத்திய அரசு உடனடியாக தில்லி அரசுக்கு ரூ.5,000 கோடி நிதியுதவி வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளேன். கரோனா காலத்தில் முன்கள ப்பணியாளா்கள், அரசு ஊழியா்களுக்கு ஊதியம் வழங்க குறைந்தபட்சம் ரூ 7 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. மத்திய அரசு முதல்கட்டமாக ரூ.5,000 கோடி நிதியுதவி அளிக்க வேண்டும் என்றாா் சிசோடியா.

Advertisement

இது தொடா்பாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘ பேரிடரான இந்த நேரத்தில் தில்லி மக்களுக்கு நிதியுதவி அளித்து மத்திய அரசு உதவ வேண்டும்’” எனக் கேட்டுக் கொண்டுள்ளாா்.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த மாா்ச் 25-ம் தேதியிலிருந்து நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தற்போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொது முடக்கத்தால் கடந்த இரு மாதங்களாக தில்லியில் தொழிற்சாலை, கடைகள், வா்த்தக நிறுவனங்கள் இயங்காததால், தில்லியின் வரி வசூல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.