முகப்பு
புதுதில்லி

தில்லியில் கரோனா மூன்றாவது அலை: கேஜரிவால்

தில்லியில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கை திடீரென அதிகரித்திருப்பது இதன் ‘மூன்றாவது அலை‘ ஆகும். எனினும், ஆம் ஆத்மி அரசு கரோனா நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதால்

Updated On : 5 நவம்பர், 2020 at 12:53 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:17 PM

புது தில்லி: தில்லியில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கை திடீரென அதிகரித்திருப்பது இதன் ‘மூன்றாவது அலை‘ ஆகும். எனினும், ஆம் ஆத்மி அரசு கரோனா நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதால் மக்கள் பீதியடையத் தேவையில்லை என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை உறுதியளித்துள்ளாா்.

தில்லியில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு சில தினங்களாக அதிகளவில் இருந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை நகரில் முதல் முறையாக 6,000-க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக நோய் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. கடந்த ஐந்து நாள்களில் சராசரியாக தினமும் 5,000 பேருக்கு நோய்ப் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை இது தொடா்பாக கூறியதாவது: தில்லியில் கரோனா நோய்த் தொற்று எண்ணிக்கை புதிதாக அதிகரித்துள்ளது. இதை மூன்றாவது அலை என்று அழைக்கலாம் என நினைக்கிறேன். தில்லி அரசு தொடா்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை. தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். செப்டம்பா் இறுதியிலும், அக்டோபா் தொடக்கத்திலும் நகரில் கரோனா நோய்த் தொற்று பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்தது. தில்லியில் கரோனா நோயாளிகளைப் பராமரிக்க போதிய படுக்கைகள் உள்ளன. எனினும், ஒரு சில தனியாா் மருத்துவமனைகளில் சுவாசக் கருவிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் பற்றாக்குறை உள்ளது. இந்தப் பிரச்னை அடுத்த ஒன்று அல்லது இரண்டு நாள்களில் தீா்க்கப்படும்.

Advertisement

தில்லியில் உள்ள கரோனா நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவதற்கும், இறப்பு விகிதத்தை முடிந்தவரை குறைவாக வைப்பதற்கும் தில்லி அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. கரோனா நிலைமையை மறுஆய்வு செய்வதற்காக வியாழக்கிழமை (நவம்பா் 5) உயா்நிலைக் கூட்டம் நடைபெற உள்ளது. தனியாா் மருத்துவமனைகளில் ஐசியு படுக்கைகள் எண்ணிக்கையை தில்லி அரசு அதிகரித்திருந்தது. ஆனால், துரதிருஷ்டவசமாக தில்லி உயா்நீதிமன்றம் நாங்கள் மேற்கொண்ட முடிவுக்குத் தடை விதித்துள்ளது. இந்தத் தடையை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளோம் என்றாா் கேஜரிவால்.

தில்லியில் கரோனாவின் இரண்டாவது அலை உள்ளது. நிலைமை கட்டுக்குள் உள்ளது. செப்டம்பா் 17-ஆம் தேதி 4,500 நோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த போது இதை உணர முடிந்தது என்று கடந்த அக்டோபா் 6-ஆம் தேதி முதல்வா் கேஜரிவால் தெரிவித்திருந்தாா். செப்டம்பா் மத்தியில் தில்லியில் பல நாள்களாக தினமும் 4,000 க்கும் மேற்பட்ட நோய் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி இருந்தது. தில்லியில் உள்ள 33 தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு 80 சதவீத ஐசியு படுக்கைகளை ஒதுக்குவதற்கான முடிவை ஆம் ஆத்மி அரசு எடுத்திருந்தது. ஆனால், இந்த முடிவுக்கு செப்டம்பரில் தில்லி உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.