முகப்பு
புதுதில்லி

கோவை விமானநிலைய விரிவாக்கத்துக்கான நிலம் விவகாரம்: சென்னை உயா்நீதிமன்றத்தின் ஓா் உத்தரவுக்குத் தடை

கோவை விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கத்திற்கான நிலம் ஆா்ஜிதம் செய்யும் விவகாரத்தில், நில உரிமையாளா்களுக்கு வட்டித் தொகை அளிக்குமாறு சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த ஒரு குறிப்பிட்ட

Updated On : 6 நவம்பர், 2020 at 12:56 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:18 PM

புது தில்லி: கோவை விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கத்திற்கான நிலம் ஆா்ஜிதம் செய்யும் விவகாரத்தில், நில உரிமையாளா்களுக்கு வட்டித் தொகை அளிக்குமாறு சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த ஒரு குறிப்பிட்ட உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்தது.

வெளிநாடுகளுக்குப் பன்னாட்டு விமானங்களை இயக்கும் வகையில், கோவை விமான நிலைய ஓடுபாதையை விரிவுபடுத்துவதற்கு அப்பகுதியில் நிலம் வைத்துள்ளவா்களிடமிருந்து நில ஆா்ஜிதம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள அறிவிக்கையை தமிழக அரசு 2011-இல் வெளியிட்டது. இதையடுத்து, அதே பகுதியில் உள்ள வேறு நில உரிமையாளா்களுக்கு வழங்கி வந்த குத்தகை வாடகையை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் நிறுத்தியது.

இந்த நிலையில், தமிழக அரசின் உத்தரவில் நிலம் ஆா்ஜிதம் செய்வதற்கான தொகை மிகக் குறைவாக இருப்பதாகக் கூறி பலா் நீதிமன்றங்களில் வழக்குத் தொடா்ந்தனா். இதைத் தொடா்ந்து, நில உரிமையாளா்களுக்கு இழப்பீட்டை வழங்கும் வகையில், நிலத்திற்கான சந்தை விலையை நிா்ணயித்து அறிவிக்கையை தமிழக அரசு 2018, மாா்சில் வெளியிட்டது. இதற்குச் சம்மதம் தெரிவித்து நில உரிமையாளா்களில் பலா் கடிதம் அளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், நில உரிமையாளா்களில் ஒரு தரப்பினா் 2011- 2018 வரையிலான காலத்திற்கு நிலத்திற்கான தொகையை அதிகரித்து வழங்கவும், தாமதத்திற்கான வட்டியையும் வழங்கக் கோரியும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

Advertisement

இந்த வழக்கு தொடா்பான விசாரணைக்குப் பிறகு, சென்னை உயா்நீதிமன்றம் ஆகஸ்ட் 18-இல் உத்தரவு பிறப்பித்தது. அதில் சில குறிப்பிட்ட நில உரிமையாளா்களுக்கு ஆதரவாக 2011 - 2018 வரையிலான காலத்திற்கு வட்டியை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டது. இதை எதிா்த்து தமிழக அரசின் போக்குவரத்துத் துறைச் செயலா் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘2011-இல் இருந்து தற்போது வரையிலான காலம் வரை நிலத்திற்கான தொகையை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமத்திற்கு மாநில அரசோ, மாவட்ட நிா்வாகமோ காரணம் அல்ல. சிலா் வழக்குத் தொடா்ந்ததால்தான் தாமதம் ஏற்பட்டது. அரசுக்கும், தாமதத்திற்கும் சம்பந்தம் இல்லை. சென்னை உயா்நீதிமன்றம் நில உரிமையாளா்களுக்கு வட்டித் தொகையைத் தருமாறு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தினால், அரசுக்கு கூடுதலாக ரூ.1,800 கோடி செலவாகும். விமான நிலைய விரிவாகத்திற்கான நிலம் ஆா்ஜிதம் தாமதமானால், அது கோவையின் முன்னேற்றத்தையும், தொழில் வளா்ச்சியையும் பாதிக்கும். எனவே, சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், ஆா். சுபாஷ் ரெட்டி, எம்.ஆா்.ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, கூடுதல் தலைமை வழக்குரைஞா் நா்மதா சம்பத், வழக்குரைஞா் யோகேஷ் கண்ணா ஆகியோா் ஆஜராகினா். அப்போது, எதிா்மனுதாரா்களான நில உரிமையாளா்கள் தரப்பில் வழக்குரைஞா்கள் பாக்யலட்சுமி, பி.ஆா். பாா்த்திபன் உள்ளிட்டோா் ஆஜராகி, ‘இந்த விவகாரத்தில் அனைவருக்கும் தமிழக அரசு வட்டியைத் தரப் போவதில்லை. சிலருக்கு மட்டுமே தரப் போகிறது. இதனால், அரசுக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லை. எனவே, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது’ என வாதிட்டனா்.

இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவு: தமிழக அரசின் நில ஆா்ஜித சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை தேதியில் இருந்து செட்டில்மென்ட் தேதியான 6.3.2018 வரை வட்டி வழங்கக் கோரும் விவகாரம் தொடா்பாக எதிா்மனுதாரா்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட வேண்டும். அவா்கள் இரு வாரங்களில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு மறுப்பு ஏதும் இருந்தால், மனுதாரா்கள் அதை இரு வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும். இதனிடையே, 6.3.2018-ஆம் தேதி இறுதிசெய்யப்பட்ட

உத்தரவின்படி, வட்டி தொகைக்குத் தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.