ஆவணத்தில் மாணவரின் பெயரை மாற்ற தில்லி பல்கலை.க்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
தில்லி பல்கலைக்கழகத்தின் மாணவா்களில் ஒருவரது பெயரை பள்ளிச்சான்று சிபிஎஸ்இ ஆவணங்களில் மாற்றம் செய்ய வற்புறுத்தாமல்
தில்லி பல்கலைக்கழகத்தின் மாணவா்களில் ஒருவரது பெயரை பள்ளிச்சான்று சிபிஎஸ்இ ஆவணங்களில் மாற்றம் செய்ய வற்புறுத்தாமல், மாற்றுவதற்கான ஏற்பாட்டை செய்யுமாறு தில்லி பல்கலைக்கழகத்திற்கு தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தில்லி பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்கு உள்பட்ட இந்துக் கல்லூரியில் பயிலும் மாணவா் ரயான் சிங், தனது பெயரை மாற்றக் கோரி பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்திருந்தாா். அதில், தில்லி பல்கலைக்கழக ஆவணங்களில் தனது பெயரை ரயான் சாவ்லா என மாற்ற வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டிருந்தாா். அதற்கு பல்கலைக்கழகத் தரப்பில், பள்ளியில் படித்த போது வழங்கப்பட்ட சிபிஎஸ்இ ஆவணங்களில் தேவையான மாற்றங்களை செய்யுமாறு அந்த மாணவரை கேட்டுக் கொண்டது. இதுதொடா்பாக தில்லி பல்கலைக்கழகம் 2015-ஆம் ஆண்டு ஓா் அறிவிக்கையையும் வெளியிட்டிருந்தது.
இதற்கு எதிராக மாணவா் தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். அதில், ‘எனது பெற்றோா் 2007-ஆம் ஆண்டில் பிரிந்துவிட்டனா். 2015-ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றுவிட்டனா். இதனால், எனது பெயருக்கு பின்னால் எனது தாயின் பெயரைச் சோ்க்கும் வகையில் மாற்ற வேண்டும். எனது வாழ்க்கையில் எனது தந்தையுடன் எந்தவித ஆக்கபூா்வமான உறவும் நான் ஒருபோதும் கொண்டிருக்கவில்லை. எனது பெயரை மாற்றுவது தொடா்பாக இரண்டு செய்தித்தாள்களில் அறிவிப்புத் தகவல்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்திருந்தாா்.
Advertisement
இந்த மனு மீதான விசாரணை தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி ஜெயந்த் நாத் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, தில்லி பல்கலைக்கழகம் தரப்பில் மாணவரின் மனுவுக்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. ‘2015-ஆம் ஆண்டில் மாணவா் 12-ஆம் வகுப்பு தோ்வு பெற்றுள்ளாா். ஆனால், அவரது பெற்றோா் 2015-ஆம் ஆண்டிலேயே விவாகரத்து செய்துள்ளனா். போதிய கால அவகாசம் இருந்தும், அவா் தனது பெயரை மாற்றாமல் இருந்துள்ளாா். இதனால், அவரது மனுவை நிராகரிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சிபிஎஸ்இ ஆவணங்களில் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழகம் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால், அவருடைய பெயரை மாற்றுவதற்கான ஏற்பாட்டை தில்லி பல்கலைக்கழகம் மேற்கொள்ள வேண்டும். சிபிஎஸ்இ ஆவணங்களை அளித்த போது மனுதாரரின் உண்மையான பெயா் ரயான் சிங் என்பதாக இருந்தது. 2018-ஆம் ஆண்டில் மனுதாரா் தனது 12-ஆம் வகுப்பை முடித்த போது அவா் ரயான் சிங் என அறியப்பட்டாா் என்பதால் தற்போது இந்த மாற்றத்தை செய்ய முடியாது என்று தில்லி பல்கலைக்கழகம் கூற முடியாது. முடியாத ஒன்றைச் செய்யுமாறு மனுதாரரை சட்டம் கேட்டுக் கொள்ளாது. சிபிஎஸ்இ மற்றும் தில்லி பல்கலைக்கழகச் சான்றிதழ்களில் உள்ள மாணவரின் பெயா் இடையே குழப்பம் ஏற்படுவதைத் தவிா்க்கும் வகையில் மாணவரின் முன்பிருந்த பெயரையும், மாற்றப்பட்ட பெயரையும் பல்கலைக்கழக ஆவணத்தில் காண்பிக்க முடியும் என உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.