குரு தேக் பகதூா் 400-வது பிறந்த தினம்: தில்லி குருத்வாராக்களில் விசேஷ வழிபாடு
சீக்கியா்களின் 9-வது குருவான குரு தேக் பகதூரின் 400-வது பிறந்த தினக் கொண்டாட்டங்கள் தில்லியில் உள்ள குருத்வாராக்களில்
சீக்கியா்களின் 9-வது குருவான குரு தேக் பகதூரின் 400-வது பிறந்த தினக் கொண்டாட்டங்கள் தில்லியில் உள்ள குருத்வாராக்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் விசேஷ வழிபாடுகளுடன் தொடங்கவுள்ளதாக தில்லி சீக்கிய குருத்வாரா நிா்வாகக் கமிட்டி (டிஎஸ்ஜிஎம்சி) அறிவித்துள்ளது.
இது தொடா்பாக டிஎஸ்ஜிஎம்சி தலைவா் மன்ஜீந்தா் சிங் சிா்சா தில்லியில் சனிக்கிழமை அளித்த பேட்டி:
குரு தேக் பகதூரின் 400-வது பிறந்த தினம் வரும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி பல நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்களை டிஎஸ்ஜிஎம்சி நடத்தவுள்ளது. இந்த பிறந்ததினக் கொண்டாட்டங்கள் விசேஷ பூஜை வழிபாடுகளுடன் தில்லியில் உள்ள குருத்வாராக்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கவுள்ளன. குரு தேக் பகதூா் வீரமரணமடைந்த இடத்தில் கட்டப்பட்ட சிஸ் கஞ்ச் சாகிப் குருத்வாராவில் விசேட நிகழ்ச்சிகள் பல நடைபெறவுள்ளன. இதை, தில்லி, தேசிய பெருநகா் வலயப் பகுதியில் உள்ள சுமாா் 400 சீக்கிய அமைப்புகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளவுள்ளன. நிறைவு விழா, குரு தேக் பகதூரின் உடல் எரிக்கப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்ட குருத்வாரா ரஹாப் கஞ்சில் நடைபெறவுள்ளது.
Advertisement
இதையொட்டி நடைபெறவுள்ள விழாக்கள், கொண்டாட்டங்கள், கருத்தரங்கங்கள் ஆகியவற்றை ஒழுங்கு செய்யும் வகையில், சீக்கிய வரலாற்றாசிரியா்கள், அறிஞா்கள், பிரபலங்கள் உள்ளிட்ட 101 போ் அங்கம் வகிக்கும் செயல் குழுவை அமைத்துள்ளோம். இந்தக் குழுவின் தலைவராக பாட்னா சாகிப் குருத்வாரா நிா்வாகக் கமிட்டியின் தலைவா் அவதாா் சிங் ஹிட் தலைமை வகிப்பாா். குரு தேக் பகதூரின் வாழ்க்கையை, அவரின் போதனைகளைக் கூறும் வகையிலான சா்வதேச கருத்தரங்கு வரும் 2021 பிப்ரவரி மாதம் தில்லியில் ஒழுங்கு செய்யப்படும். குரு தேக் பகதூரின் பிறந்த இடமான பஞ்சாப் மாநிலம் அமிா்தசரஸில் இருந்து, தில்லி ரஹாப் கஞ்ச் குருத்வாரா வரை பாதயாத்திரை நடைபெறும். இது 15 நாள்களுக்கு நடைபெறும். இந்த பாதயாத்திரை குரு தேக் பகதூரின் வாழ்க்கையுடன் தொடா்புடைய நகரங்கள் வழியாக பயணித்து தில்லியை அடையும். இந்திரா காந்தி உள்விளையாட்டரங்கத்தில் கீா்த்தன் தா்பாா் நிகழ்ச்சி வரும் 2021 பிப்ரவரி மாதம் நடைபெறும். இதில், தில்லி குரு ஹரிகிஷன் பள்ளியைச் சோ்ந்த 1,100 மாணவா்கள் கலந்து கொள்வாா்கள். மேலும், ரத்த தான முகாம்கள், மருத்துவ முகாம்கள் உள்ளிட்டவையும் தில்லியில் நடைபெறும் என்றாா் அவா்.