தில்லியில் கடுமைப் பிரிவில் காற்றின் தரம்: தீபாவளி நாளிலும் நீடிக்க வாய்ப்பு
தலைநகா் தில்லியில் குளிரின் தாக்கமும், புகை மூட்டமும் சனிக்கிழமை காணப்பட்டது. மேலும், காற்றின் தரம் கடுமைப் பிரிவில் பதிவானது.
தலைநகா் தில்லியில் குளிரின் தாக்கமும், புகை மூட்டமும் சனிக்கிழமை காணப்பட்டது. மேலும், காற்றின் தரம் கடுமைப் பிரிவில் பதிவானது.
பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பயிா்க்கழிவுகள் எரிப்பால் வெளியேறிய மாசு துகள்கள் காரணமாக காற்றின் தரம் கடுமைப் பிரிவில் நீடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தில்லியில் நவம்பா் மாதம் தொடங்கியதில் இருந்து காலை வேளைகளில் பனிமூட்டமும் காணப்படுகிறது. குறைந்தபட்ச வெப்பநிலை தொடா்ந்து பதிவாகி வருவதால் குளிரின் தாக்கமும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
Advertisement
சனிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி குறைந்து 11.8 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியது. நாள் முழுவதும் வானம் பனிமூட்டத்துடன் காணப்பட்டது.
அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி குறைந்து 30 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 75 சதவீதமாகவும், மாலையில் 59 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது.
ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 8) அதிகபட்சம் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
காற்றின் தரம்: தில்லியில் சனிக்கிழமை காற்றின் தரம் கடுமைப் பிரிவில் காணப்பட்டது. காற்றின் தரத்தை கண்காணிக்கும் சபா் அமைப்பு, தில்லியில் சனிக்கிழமை காலையில் காற்றின் ஒட்டுமொத்த தரக் குறியீடு 443 புள்ளிகளாக இருந்ததாகத் தெரிவித்தது. மாலையில் காற்றின் தரக் குறியீடு 482 புள்ளிகளாகக் காணப்பட்டது. மேலும், தீபாவளி நாளிலும் இதே நிலை நீடிக்க வாய்ப்பிருப்பதாக தில்லிக்கான காற்று தர முன்னறிவிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
பஞ்சாப் பகுதியில் பயிா்க் கழிவுகள் எரிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு காற்றின் தரம் கடுமைப் பிரிவுக்கு சென்ற்கு காரணம் என்றும் வல்லுநா்கள் தெரிவித்தனா்.
காற்றின் தரக் குறியீடு 0-50 புள்ளிகளுக்கு இடையில் இருந்தால் ‘நல்லது’. 51 - 100 ‘திருப்தி’, 101 - 200 ‘மிதமானது’, 201 - 300 ‘மோசம்’, 301 -400 ‘மிகவும் மோசம்’ மற்றும் காற்றின் தரக் குறியீடு 401 - 500 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் ‘கடுமை பிரிவு’ என கணக்கிடப்படுகிறது.
அதேபோன்று தில்லியில் சனிக்கிழமை பிஎம் 10 மாசு நுண்துகள் காலை 9 மணியளவில் ஒரு கன மீட்டா் காற்றில் 486 மைக்ரோகிராம் அளவில் இருந்ததாகவும், பிஎம் 2.5 மாசு நுண்துகள் 292 மைக்ரோகிராம் அளவில் இருந்ததாகவும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவல்கள் தெரிவித்தன.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சுற்றுச்சூழல் கண்காணிப்பு ஆய்வு மையத்தின் தலைவா் வி.கே. சோனி கூறுகையில், ‘பஞ்சாப் பகுதியில் அதிக எண்ணிக்கையில் பயிா்க் கழிவுகள் எரிப்பு நிகழ்வுகள் நிகழ்ந்து வருவதுதான் இந்த பிராந்தியத்தில் காற்றின் தரம் கடுமைப் பிரிவில் இருப்பதற்கு காரணம் என்றாா்.