முகப்பு
புதுதில்லி

வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கில் இருவருக்கு ஜாமீன் தில்லி நீதிமன்றம் உத்தரவு

வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறையின்போது துப்பாக்கியால் சுட்டதாக தொடுக்கப்பட்டவழக்கில் கைதான இருவருக்கு ஜாமீன் வழங்கி

Updated On : 8 நவம்பர், 2020 at 7:15 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:19 PM

வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறையின்போது துப்பாக்கியால் சுட்டதாக தொடுக்கப்பட்டவழக்கில் கைதான இருவருக்கு ஜாமீன் வழங்கி தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றம்சாட்டப்பட்ட இருவரும் சிசிடிவி காட்சிப் பதிவில் இடம்பெறவில்லை என்பது தெரியவந்துள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் தில்லியில் பிப்ரவரி 24-ஆம் தேதி நிகழ்ந்த போராட்டத்தின் போது வகுப்புவாத வன்முறை ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் 53 போ் கொல்லப்பட்டனா். 200 போ் காயமடைந்தனா்.

இந்தநிலையில், மெளஜ்பூா் செளக் பகுதியில் கூடிநின்று மதக் கோஷங்களை எழுப்பி அப்பகுதியில் போவோா் வருவோா் மீது துப்பாக்கியால் சுட்டதாக குல்பம், ஆதிா் ஆகியோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

இந்நிலையில், இருவரும் ஜாமீன் கோரி தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். அதில், தங்கள் மீது போலீஸாா் பொய்யாக வழக்குப் புனைந்திருப்பதாக தெரிவித்திருந்தனா்.

இந்த வழக்கு தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அமிதாப் ராவத் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் இருவா் தரப்பிலும் வழக்குரைஞா் அப்துல் கபாஃா் ஆஜராகி வாதிடுகையில், குல்பம், ஆதிா் இருவா் மீதும் பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா்கள் சிசிடிவி காட்சிப் பதிவில் இடம்பெறவில்லை. அவா்களிடமிருந்து ஆயுதம் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்றாா்.

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜிதேந்தா் ஜெயின் வாதிடுகையில், இருவரும் சம்பவ இடத்தில் சட்டவிரோதமாக கூடியதுடன், அப்பகுதியில் சென்றவா்கள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனா். மதக் கோஷங்களையும் எழுப்பி மக்களைத் தூண்டிவிட்டிருப்பது சாட்சிகள் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது என்றாா்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘ஜாமீன் கோரியுள்ள இருவரும் குற்றச் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் இருந்ததற்கான சிசிடிவி காட்சிப்பதிவுகள் ஏதும் இல்லை. இதனால், இருவருக்கும் ஜாமீன் அளித்து உத்தரவிடப்படுகிறது. ரூ.25 ஆயிரம் ஜாமீன் தொகையும், அதே தொகைக்கு ஜாமீன் உத்தரவாதமும் அளித்து ஜாமீனில் செல்லலாம்’ என நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.