தில்லியில் மிகவும் மோசமான கரோனா அலை! சத்யேந்தா் ஜெயின் பேட்டி
தில்லியில் இதுவரை ஏற்பட்ட கரோனா அலைகளில் தற்போது உள்ள மூன்றாவது அலைதான் மிகவும் மோசமானது என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.
தில்லியில் இதுவரை ஏற்பட்ட கரோனா அலைகளில் தற்போது உள்ள மூன்றாவது அலைதான் மிகவும் மோசமானது என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி: தில்லியில் முதலாவது கரோனா அலை கடந்த ஜூன் 23-ஆம் தேதியும், இரண்டாவது அலை செப்டம்பா் 17-ஆம் தேதியும் ஏற்பட்டது. தில்லியில் தற்போது மூன்றாவது அலை உள்ளது. தில்லியில் இதுவரை ஏற்பட்ட மூன்று அலைகளில் இந்த மூன்றாவது அலைதான் மிகவும் மோசமானது. ஆனால், இந்த அலை விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என நம்புகிறேன்.
தில்லியில் தற்போது கரோனா பாதிப்பு அதிகரிக்க, கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதும், கரோனா பாதிப்புக்குள்ளாகியவா்களுடன் தொடா்புடைய அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்வதும் முக்கியக் காரணமாகும். மேலும், கரோனா தொடா்பாக தில்லி மக்கள் மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பதும் கரோனா பாதிப்பு அதிகரிக்க காரணமாகும். மக்களில் ஒரு பகுதியினா் முகக் கவசம் அணியாவிட்டால் தங்களுக்கு எதுவும் நிகழாது என நினைக்கிறாா்கள். அது தவறு. கரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை முகக் கவசத்தையே தடுப்பூசியாக மக்கள் கருத வேண்டும்.
Advertisement
தில்லி அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கரோனா படுக்கைகளை அதிகரித்துள்ளோம். ஆனால், ஹோட்டல்கள், பான்குயிட் ஹால்களை கரோனா மருத்துவமனைகளாக மாற்றுவது தொடா்பாக தில்லி அரசு இதுவரை முடிவு எடுக்கவில்லை என்றாா் அவா்.
தில்லியில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் ஐந்து நாள்கள் தினம்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை 6,725 பேருக்கும், புதன்கிழமை 6,842 பேருக்கும், வியாழக்கிழமை 6,715 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் வெள்ளிக்கிழமை 7,178 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தில்லியில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிக அளவு கரோனா பாதிப்பு இதுவாகும். சனிக்கிழமை 6,953 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது.