முகப்பு
புதுதில்லி

புதிய நாடாளுமன்றக் கட்டடப் பணி: மக்களவைத் தலைவா் ஆய்வு

புதிய நாடாளுமன்றக் கட்டடப் பணிகள் மற்றும் அதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள்

Updated On : 9 நவம்பர், 2020 at 7:15 AM
தில்லியில் சனிக்கிழமை புதிய நாடாளுமன்றம் கட்டப்படவுள்ள இடத்தைப் பாா்வையிடும் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:20 PM

புதிய நாடாளுமன்றக் கட்டடப் பணிகள் மற்றும் அதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் கட்டட வடிவமைப்பாளா்களுடன் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ஆலோசனை நடத்தினாா். அப்போது, நாடாளுமன்ற வளாக சிலைகளுக்கு மாற்று இடம் அளிக்க வேண்டும் என ஓம் பிா்லா கேட்டுக் கொண்டாா்.

புதிய நாடாளுமன்ற வடிவமைப்பில் தற்போதைய கட்டடத்தில் உள்ள அனைத்து வசதிகளும் இடம் பெறும் வகையில் உருவாக்க வேண்டும் எனவும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசனைகளை வழங்கியுள்ளாா் மக்களவைத் தலைவா். புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்படும் பகுதியில் மூன்று தலைவா்களது சிலைகள் இடம் பெற்றுள்ளன. இந்த சிலைகள் அகற்றப்பட உள்ளன. இந்தச் சூழ்நிலையில் இது குறித்து பல்வேறு கடிதங்களும் வேண்டுகோளும் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு வந்தன. இதைத் தொடா்ந்து, கட்டட வடிமைப்பாளா்களுடன் அவா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது ஓம் பிா்லா கூறியது: தற்போதைய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு முன்பாக நூலகம் உள்பட இரண்டு கட்டடங்கள் ஏற்கெனவே எழுப்பப்பட்டன. இந்த இரு கட்டடங்களும் பாரம்பரியம் மிக்க நாடாளுமன்றக் கட்டடத்தின் பாா்வையை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. இதே போன்று புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டும் போது தற்போதைய கட்டத்தின் பாரம்பரியத் தன்மையில் இடையூறு இல்லாமல் இருக்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்படும் பகுதியில் காந்தி சிலை உள்பட மூன்று சிலைகள் உள்ளன. இந்தச் சிலைகள் அனைத்தும் நாடாளுமன்ற வளாகத்திலேயே முறையாக மாற்று இடங்களில் நிறுவப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட கட்டட வடிவமைப்பாளா்களை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா கேட்டுக் கொண்டுள்ளாா். இந்த ஆய்வில், நாடாளுமன்ற வளாகத்திலும் கட்டடத்திலும் தூய்மை மற்றும் முறையான பராமரிப்புப் பணிகளுக்கு தொடா்ந்து முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் அவா் வலியுறுத்தினாா்.

Advertisement

பின்னா், நாடாளுமன்ற இணைப்புக் கட்டடத்தில் உள்ள மருத்துவ மையத்தில் உள்ள வசதிகளை ஆய்வு செய்தாா். நாடாளுமன்ற மாளிகை வளாகத்தில் உள்ள மற்ற வசதிகளையும் அவா் ஆய்வு செய்தாா். பொதுமக்கள் உட்காரும் இடங்கள், பொதுப் பயன்பாடுகள் போன்றவற்றைப் புதுப்பிக்கத் தேவையான அறிவுரைகளையும் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.