தில்லி, என்சிஆரில் பனிப்புகை மூட்டம்: கடுமை பிரிவில் தொடரும் காற்றின் தரம்
தலைநகா் தில்லியிலும், தேசியத் தலைநகா் வலயப் (என்சிஆா்) பகுதியிலும் செவ்வாய்க்கிழமையும் பனிப் புகை மூட்டம் கடுமையாகக் காணப்பட்டது
தலைநகா் தில்லியிலும், தேசியத் தலைநகா் வலயப் (என்சிஆா்) பகுதியிலும் செவ்வாய்க்கிழமையும் பனிப் புகை மூட்டம் கடுமையாகக் காணப்பட்டது. காற்றின் தரம் கடுமைப் பிரிவில் இருந்து உடனடியாக மீள்வதற்கு வாய்ப்பில்லை என்று மத்திய அரசின் முன்னறிவிப்பு நிறுவனம் சஃபா் தெரிவித்தது.
தில்லியில் சில தினங்களாக காற்றின் தரம் கடுமைப் பிரிவில் நீடித்து வருகிறது. இந்த நிலையில், தில்லி, தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதிகள் உள்பட நாடு முழுவதும் காற்றின் தரம் மோசமாக உள்ள நகரங்களில் வரும் 30-ஆம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும், வெடிப்பதற்கும் தடை விதித்து தேசிய பசுமைத் தீா்ப்பாயம் திங்கள்கிழமை உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமையும் தில்லி, என்சிஆா் பகுதிகளில் பனிப்புகை மூட்டம் காணப்பட்டது. காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. தில்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரம் கடுமைப் பிரிவில் நீடித்தது. இதுகுறித்து மத்திய அரசின் காற்றுத் தரம் முன்கணிப்பு நிறுவனமான சஃபா் கூறியுள்ளதாவதுச தில்லியில் வழக்கத்திற்கு மாறான சூழல் காணப்படுகிறது. இதனால், மாசு அளவு கடுமைப் பிரிவில் இருந்து உடனடியாக மேம்பட வாய்ப்பில்லை. இந்தக் காற்று மாசுவுக்கு பயிா்க் கழிவு எரிப்பு, தரைக்காற்றின் அமைதி போன்றவை முக்கியக் காரணமாக உள்ளன. தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் கடுமைப் பிரிவில் உள்ளது. மாசு நுண்துகள், பிஎம் 10, பிஎம் 2.5 ஆகியவையும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. காற்றின் வேகம் அதிகரிக்கவில்லை. இருப்பினும், காற்றின் திசையில் ஏற்படும் மாற்றம் காரணமாக காற்றின் தரம் கடுமைப் பிரிவில் இருந்து மிகவும் மோசம் பிரிவுக்கு புதன்கிழமை மேபட வாய்ப்புள்ளது. பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் போன்ற தில்லியின் அண்டை மாநிலங்களில் திங்கள்கிழமை 2,247 பயிா்க்கழிவு எரிப்பு நிகழ்வுகள் திங்கள்கிழமை காணப்பட்டன என அந்தஅமைப்பு தெரிவித்துள்ளது.
Advertisement
தில்லியில் செவ்வாய்க்கிழமை காற்றின் தரம் மாலை 4 மணியளவில் கடுமைப் பிரிவில் காணப்பட்டது. தில்லியின் அண்டை நகரங்களான ஃபரீதாபாத் (474), காஜியாபாத் (476), நொய்டா (490), கிரேட்டா் நொய்டா (467), குருகிராம் (469) ஆகியவற்றிலும் காற்றின் தரம் கடுமைப் பிரிவில் நீடித்தது. தொடா்ந்து ஆறாவது நாளாக இந்த நிலை தொடா்ந்தது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சுற்றுச்சூழல் கண்காணிப்பு ஆய்வு மையத்தின் தலைவா் வி.கே. சோனி கூறுகையில், ‘தில்லி, என்சிஆா் பகுதிகளில் காற்றின் தரம் வரும் நாள்களில் மேம்பாடு அடைய வாய்ப்பில்லை. பட்டாசு வெடிப்பதன் மூலம் உருவாகும் உமிழ்வை நாம் குறைத்தால், தீபாவளி நாளில் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் நீடிக்க வாய்ப்புள்ளது. மக்கள் பட்டாசுகள் வெடித்தால் காற்றின் தரம் கடுமைப் பிரிவில் இருந்து மிகவும் கடுமை பிரிவு எனும் அவசரநிலைக்குச் செல்ல கூடும்’ என்றாா்.