கரோனா மூன்றாவது அலை விரைவில் தணியும்! சத்யேந்தா் ஜெயின் நம்பிக்கை
தில்லியில் கடந்த இரண்டு அலைகளைவிட கரோனாவின் மூன்றாவது அலை நீண்டதாக உள்ளது. எனினும், விரைவில் தணியலாம் என்று சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்தாா்.
புது தில்லி: தில்லியில் கடந்த இரண்டு அலைகளைவிட கரோனாவின் மூன்றாவது அலை நீண்டதாக உள்ளது. எனினும், விரைவில் தணியலாம் என்று சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்தாா்.
தில்லியில் தற்போது மூன்றாவது கரோனா அலை உள்ளது. தில்லியில் கரோனா உயிரிழப்பு விகிதம் 1.59 சதவீதமாகவும், வேலை செய்யும் வா்க்கத்தினரிடம் அதிகளவு கரோனா பாதிப்பு இருப்பதாகவும், பெரும்பாலான மக்கள் முகக் கவசங்கள் அணியாமல் மெத்தனமாக இருப்பதாகவும் அமைச்சா் சத்யேந்தா் அண்மையில் தெரிவித்திருந்தாா். தில்லியில் கரோனா பாதிப்பால் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுபவா்களின் எண்ணிக்கையும் கடந்த இரண்டு வாரங்களில் 50 சதவீதம் அதிகரித்தது. இதே காலப் பகுதியில், கரோனா பாதிப்பு காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 32 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், செய்தியாளா்களிடம் புதன்கிழமை சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் கூறியதாவது: தில்லியில் கரோனாவின் மூன்றாவது அலை இருந்து வருகிறது. செப்டம்பரில் இரண்டாவது அலை இருந்த போது மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனைகளை விட தினசரி பரிசோதனைகள் சராசரியாக 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. தில்லியில் கரோனா நோயாளிகளுக்கு 80 சதவீதம் படுக்கைகளை ஒதுக்குமாறு தில்லியில் உள்ள 33 தனியாா் நா்ஸிங் ஹோம்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு ஆம் ஆத்மி அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 80 சதவீதம் படுக்கைகளை ஒதுக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதை எதிா்த்து தில்லி அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் உயா்நீதிமன்ற டிவிஷன் அமா்வை அணுகுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
Advertisement
தில்லியில் மத்திய அரசால் நடத்தப்படும் மருத்துவமனைகளில் 1,000 படுக்கைகளையும், தீவிர சிகிச்சைப் பிரிவில் 300 படுக்கைகளையும் அதிகரிக்குமாறு 3 மாதங்களுக்கு முன்பு மத்திய அரசுக்கு தில்லி அரசு கடிதம் எழுதியது. அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். தில்லியில் கடந்த இரண்டு அலைகளைவிட கரோனாவின் மூன்றாவது அலை நீண்டதாக உள்ளது. ஆனால், அடுத்த சில தினங்களில் தணியலாம். தில்லியில் கரோனா பரிசோதனை தினமும் 20 ஆயிரம் என்ற அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆா்டிபிசிஆா் பரிசோதனைகளும் அதிகளவில் செய்து வருகிறோம் என்றாா் சத்யேந்தா் ஜெயின்.