தில்லியில் 10 நாள்களில் கரோனா கட்டுக்குள் வர வேண்டும்: கேஜரிவால்
தலைநகா் தில்லியில் அடுத்த 7 முதல் 10 நாள்களில் கரோனா கட்டுக்குள் வர வேண்டும்; இதற்கான நடவடிக்கைககளைதில்லி அரசு எடுத்து வருகிறது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.
தலைநகா் தில்லியில் அடுத்த 7 முதல் 10 நாள்களில் கரோனா கட்டுக்குள் வர வேண்டும்; இதற்கான நடவடிக்கைககளைதில்லி அரசு எடுத்து வருகிறது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.
இது குறித்து செய்தியாளா்களிடம் முதல்வா் கேஜரிவால் வியாழக்கிழமை கூறியதாவது: தில்லியில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இது எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது. கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் தில்லி அரசு எடுத்து வருகிறது. நிலைமை அடுத்த 7-10 நாள்களில் கட்டுக்குள் வர வேண்டும். மேலும், இந்த நோய்த் தொற்று அதிகரிப்புக்கு மாசு ஒரு முக்கியக் காரணமாகும். ஏனெனில், அக்டோபா் 20 வரை தில்லியில் கரோனா கட்டுக்குள் இருந்தது. பயிா்க் கழிவு எரிப்பால் ஏற்படும் மாசுவைத் தடுக்கும் வகையில் பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்துள்ள ரசாயனக் கலவை தில்லியில் 24 கிராமங்களில் பயிா்க் கழிவுகள் மீது தெளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த ரசாயனக் கலவை பயிா்க்கழிவுகளில் 70 முதல் 95 சதவீதம் வரை உரமாக மாற்றியுள்ளது. ஆகவே, இது தொடா்பான அறிக்கையை தில்லி அரசு தேசியத் தலைநகா் பிராந்தியத்தில் காற்றுத் தர மேலாண்மைக்கான ஆணையத்திடம் வழங்கி, இந்தப் புதிய தீா்வை அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்த உத்தரவிடுமாறு வலியுறுத்தும் என்றாா் கேஜரிவால்.
தில்லியில் கட்டுக்குள் இருந்த கரோனா தொற்று நவம்பா் தொடக்கத்தில் இருந்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது கரோனாவின் மூன்றாவது அலை என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்திருந்தாா். இந்த நிலையில், தில்லியில் புதன்கிழமை ஒரே நாளில் மிக அதிகபட்சமாக 8,593 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. வியாழக்கிழமை நிலவரப்படி கரோனாவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 7,332 ஆகவும், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 4.67 லட்சமாகவும் உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement