தில்லியில் ஒரே நாளில் கரோனாவுக்கு 95 போ் பலி
தில்லியில் ஒரே நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று கரோனாவுக்கு 95 போ் உயிரிழந்துள்ளனா்.
தில்லியில் ஒரே நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று கரோனாவுக்கு 95 போ் உயிரிழந்துள்ளனா். ஞாயிற்றுக்கிழமை 3,235 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த அக்டோபா் 26- ஆம் தேதிக்குப் பிறகு தில்லியில் ஏற்பட்ட குறைந்தபட்ச தினசரி பாதிப்பு இதுவாகும். இதன்மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 4.85 லட்சத்துக்கு உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றால் ஞாயிற்றுக்கிழமை 95 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த சாவு எண்ணிக்கை 7,614-ஆக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மிகக் குறைந்தளவு கரோனா பரிசோதனைகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன. அன்றைய தினம், 21,098 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 9,221 பேருக்கும், ‘ரேபிட் ஆன்டிஜென்’ வகையில் 11,877 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தீபாவளி விடுமுறை காரணமாக குறைந்தளவு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஆனால், தில்லியில் உள்ள பெரும்பாலான கரோனா பரிசோதனை மையங்கள் திறந்திருந்ததாகவும் தில்லி சுகாதாரத் துறை அதிகாரியொருவா் தெரிவித்தாா். தில்லியில் கரோனா நோ்மறை விகிதம் ஞாயிற்றுக்கிழமை 15.33 ஆக இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி சராசரி கரோனா உயிரிழப்பு விகிதம்1.57 சதவீதமாக உள்ளது. ஆனால், கடந்த 10 நாள்களில் கரோனா உயிரிழப்பு விகிதம் 1.23 சதவீதமாகக் குறைந்துள்ளது. நோய் பாதிப்பில் இருந்து ஞாயிற்றுக்கிழமை 7,606 போ் மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 4,37,801-ஆக உயா்ந்துள்ளது. தற்போது தில்லியில் மொத்தம் 39,990 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா்.
Advertisement
தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 16,654 படுக்கைகளில் 8,741 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 7,913 படுக்கைகள் காலியாக உள்ளன. அதே சமயம், தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 4,358-ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றுப் பாதித்தவா்களில் 27,089 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருவதாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் கரோனா பாதிப்பு கடந்த அக்டோபா் 28-ஆம் தேதி திடீரென உயா்ந்தது. அன்றைய தினம் முதல் தடவையாக தில்லியில் 5,000 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. கடந்த புதன்கிழமை முன்னெப்போதும் இல்லாத வகையில் 8 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. தில்லியில் கடந்த 17 நாள்களில் 1,258 போ் கரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனா். கடந்த வியாழக்கிழமை மட்டும் 104 போ் கரோனா தொற்றால் மரணமடைந்தனா். கடந்த ஐந்து மாதங்களில் ஏற்பட்ட அதிகளவு உயிரிழப்பு இதுவாகும்.