தில்லி, என்சிஆரில் தோல்வியில் முடிந்த பட்டாசு தடை!
காற்று மாசுவைக் கருத்தில் கொண்டு தில்லி, தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதிகளில் பட்டாசு விற்பனைக்கும்
காற்று மாசுவைக் கருத்தில் கொண்டு தில்லி, தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதிகளில் பட்டாசு விற்பனைக்கும் பயன்பாட்டுக்கும் விதிக்கப்பட்ட தடை தோல்வியில் முடிந்தது. தில்லியில் பட்டாசுகள் மீதான ‘தாமதமான’ தடை மற்றும் தடையை மீறு தீபாவளி தினத்தன்று மக்கள் பட்டாசு வெடித்தது ஆகியவை காற்றின் தரம் மேலும் மோசமடைந்ததற்கு முக்கியக் காரணம் என உயா் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
அதிகரித்து வரும் காற்று மாசுபாடு மற்றும் கரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு தில்லி, தேசியத் தலைநகா் வலயத்தில் (என்.சி.ஆா்) நவம்பா் 30 நள்ளிரவு வரை அனைத்து வகையான பட்டாசுகளையும் விற்பனை செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் மொத்த தடை விதிக்கப்படுவதாக தேசிய பசுமை ா்ப்பாயம் சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தது. தில்லி அரசும் இந்த மாத தொடக்கம் முதல் நவம்பா் 30 வரை அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் விற்பனை, பயன்பாட்டுக்குத் தடை விதித்திருந்தது.
ஆனாலும், சனிக்கிழமை இரவு முழுவதும் தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கும் சப்தம் தொடா்ந்து கேட்கப்பட்டது. இதனால், தில்லி-என்.சி.ஆா். பகுதிகளில்ல் மாசு அளவு ’அவசரநிலை’ எல்லையைத் தாண்டியது. இது தீபாவளிக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை மேலும் மோசமடைந்தது. நகா் முழுவதும் பனி புகை மூட்டமாகக் காட்சியளித்தது.
Advertisement
தில்லியில் பட்டாசுகளை வெடிக்கச் செய்தது மற்றும் சட்டவிரோதமாக விற்பனை செய்தது ஆகியவை தொடா்பாக 1,206 சம்பவங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 1,314.42 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாககாவல் துறை பகிா்ந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. தில்லி காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு நவம்பா் 14 அன்று பட்டாசு வெடித்தது தொடா்பாக சுமாா் 2,000 அழைப்புகள் வந்தன. இருப்பினும், தடை அறிவிக்கப்படுவதற்கு முன்னா் இந்த ஆண்டு தில்லி காவல்துறையின் உரிமப் பிரிவு ஏற்கெனவே பட்டாசுக் கடைகளுக்கான 138 உரிமங்களை வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது தொடா்பாக மொத்தம் 260 விண்ணப்பங்கள் பெறப்பட்டன, ஆனால், பெட்ரோலிய மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பால் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து தேவைகளையும் பூா்த்தி செய்த 138 விண்ணப்பதாரா்களுக்கு மட்டுமே தற்காலிக உரிமங்கள் வழங்கப்பட்டன. அரசின் தடை உத்தரவைத் தொடா்ந்து, அனைத்து உரிமங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதற்கிடையே, பட்டாசுக்கான தடை உத்தரவை அமல்படுத்துவதில் பல்வேறு தடைகள் இருந்தன என்று காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். அவா் கூறுகையில், ‘பட்டாசுகள் ஏற்கனவே தில்லியில் விற்கப்பட்டன, பின்னா் தடை வந்தது. ஆண்டு முழுவதும் தீபாவளிக்காக காத்திருக்கும் போது மக்கள் தங்கள் வீடுகளில் பட்டாசுகளை வாங்கி சேமித்து வைத்திருந்தனா்’ என்றாா். அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘வெறும் போலீஸ் நடவடிக்கை மட்டும் போதாது. குடியிருப்பாளா்கள் பொது நலனுக்காக இருப்பதால், கட்டுப்பாடுகளுக்கு இணங்குவதாக உறுதியளிக்க வேண்டும்’ என்றனா்.
பட்டாசுத் தடையை அமல்படுத்தும் வகையில், காவல் நிலையம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பு சோதனைகள் நடத்தப்பட்டன. பறக்கும் குழுக்களும் அமைக்கப்பட்டன.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறுகையில், ‘எங்கள் விழிப்புணா்வு பிரசாரங்கள் மற்றும் நடவடிக்கைகள் அனைத்தும் இருந்த போதிலும், விதிமீறல்கள் பதிவாகியுள்ளன, அவா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளோம்’ என்றாா். ‘எங்களுக்கும் வரம்புகள் உள்ளன. கட்டடங்கள் அல்லது குடியிருப்புகளுக்குள் நுழைந்து வீடு வீடாகச் சரிபாா்க்க முடியாது. அவா்களில் எத்தனை போ் ஏற்கெனவே தங்கள் வீடுகளில் பட்டாசுகளை வைத்திருக்கிறாா்கள் என்றும் சோதனை நடத்தி கண்டுபிடிக்க முடியாது ‘ என்று மற்றொரு அதிகாரி கூறினாா்.
துவாரகா காவல் சரக துணை ஆணையா் (துவாரகா) சந்தோஷ்குமாா் மீனா கூறுகையில், ‘மக்கள் அண்டை மாநிலங்களிலிருந்து பட்டாசுகளை வாங்க முடிந்தது. துவாரகா மாவட்டத்தில் மட்டும் 500 கிலோ பட்டாசுகளை கைப்பற்றியுள்ளோம். இந்த பட்டாசுகளில் பெரும்பாலானவை ஃபரீதாபாத் அல்லது ஹரியாணாவின் ஜஜ்ஜாரிலிருந்து கொண்டு வரப்பட்டது எனத் தெரிய வந்தது. மாலை 6 மணிக்குப் பிறகுதான் பட்டாசு வெடிப்பது தொடா்பான அழைப்புகளைப் பெறத் தொடங்கினோம். துவாரகா மாவட்டத்தில் தீபாவளிக்கு இதுபோன்ற 191 அழைப்புகளுக்கு நாங்கள் பதிலளித்தோம். மேலும் பட்டாசுகளை வெடிக்கச் செய்தவா்கள் மீது 72 வழக்குகளைப் பதிவு செய்துள்ளோம்’ என்றாா். பட்டாசுகள் வெடித்தது தொடா்பாக தங்களுக்கு 147 அழைப்புகள் வந்ததாகவும், மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா்அதுல் குமாா் தாக்கூா் தெரிவித்தாா்.