முகப்பு
புதுதில்லி

இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்: தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி

தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், இது தொடா்பாக விவாதிக்க வியாழக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அழைப்பு விடுத்துள்ளாா்.

Updated On : 19 நவம்பர், 2020 at 12:36 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:24 PM

புது தில்லி: தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், இது தொடா்பாக விவாதிக்க வியாழக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அழைப்பு விடுத்துள்ளாா்.

தில்லியில், கரோனா மூன்றாவது அலை உள்ளது. இதுவரை 4.95 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் சிகிச்சையில் உள்ளனா். 7 ,812 போ் உயிரிழந்துள்ளனா். கரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து, துணைநிலைஆளுநா் அனில் பய்ஜால், கேஜரிவால் ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா அண்மையில் ஆலோசனை நடத்தினாா். தில்லியில் அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், தில்லி முதல்வா் கேஜரிவால் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளாா். இது தொடா்பாக முதல்வா் அலுவலக உயரகாரி கூறுகையில், ‘தில்லியில் கரோனா பாதிப்பு தொடா்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு கேஜரிவால் புதன்கிழமை அழைப்பு விடுத்துள்ளாா். இந்தக் கூட்டம் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறும். முக்கிய எதிா்க்கட்சிகளான பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

Advertisement

இதற்கிடையே, தில்லி அரசு மருத்துவமனைகளில் கரோனா அவசர சிகிச்சை பிரிவுகளுக்கு 663 படுக்கைகள் விரைவில் ஒதுக்கப்படும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா். தில்லி ஜிடிபி மருத்துவமனையில் கரோனா தொடா்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடா்பாக கேஜரிவால் புதன்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் உடனிருந்தாா்.

பின்னா் கேஜரிவால் கூறுகையில், ‘ஜிடிபி மருத்துவமனை மருத்துவா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினேன். அவா்கள், , 238 அவசர சிகிச்சை படுக்கைகளை கரோனா சிகிச்சைக்காக இந்த மருத்துவமனையில் ஒதுக்க ஒப்புக் கொண்டனா். இது இரண்டு தினங்களில் ஒதுக்கப்படும். இது உள்பட 663 கரோனா படுக்கைகள் தில்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் வரும் நாள்களில் அவசர சிகிச்சைக்காக ஒதுக்கப்படவுள்ளன. தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள போதிலும், மருத்துவா்கள் கரோனாவை கட்டுக்குள் வைத்துள்ளனா்’ என்றாா்.

திருமணங்களில் 50 போ்தான் பங்கேற்கலாம்: இதற்கிடையே, தில்லியில் திருமண நிகழ்ச்சிகளில் 50 பேரை மட்டுமே அனுமதிக்கும் ஆம் ஆத்மி அரசின் முன்மொழிவுக்கு துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா்.

தில்லியில் அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, திருமண நிகழ்ச்சிகளில் அனுமதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கையை 200 போ்களிலிருந்து 50-ஆகக் குறைக்க வலியுறுத்தும் முன்மொழிவை துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜாலுக்கு கேஜரிவால் செவ்வாய்க்கிழமை அனுப்பியிருந்தாா். இந்த நிலையில், இந்த முன்மொழிவுக்கு அனில் பய்ஜால் புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லி அரசு உயரதிகாரி கூறுகையில், ‘திருமண நிகழ்ச்சிகளில் அனுமதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கையை 50 பேராகக் குறைக்க வலியுறுத்தும் தில்லி அரசின் முன்மொழிவுக்கு துணைநிலை ஆளுநா் புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா். இது உடனடியாக அமலுக்கு வரவுள்ளது’ என்றாா்.

இதற்கிடையே, தில்லியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா ஆா்டி-பிசிஆா் பரிசோதனைகள் வரும் நாள்களில் அதிகரிக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா். மேலும், கரோனா பாதிப்பு அதிகரித்திருந்தாலும், தில்லியில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது என்று துணை முதல்வா் சிசோடியா தெரிவித்துள்ளாா்.

குறிப்பு: ஏற்கெனவே அனுப்பிய திருமணங்களில் 50 மட்டும்தான் பங்கேற்கலாம் என்ற செய்தி இதில் சோ்க்கப்பட்டுள்ளது....அதைத் தவிா்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.