முகப்பு
புதுதில்லி

வழக்குரைஞா்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: முன் பிரீமியத் தொகை ரூ.30 கோடிக்கு தில்லி அரசு ஒப்புதல்

வழக்குரைஞா்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு முன் பிரீமியத் தொகையாக ரூ. 30 கோடியை வழங்குவதற்கு தில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Updated On : 20 நவம்பர், 2020 at 1:21 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:24 PM

புது தில்லி: வழக்குரைஞா்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு முன் பிரீமியத் தொகையாக ரூ. 30 கோடியை வழங்குவதற்கு தில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தில்லியில் தொழில்புரியும் வழக்குரைஞா்களுக்காக ‘தில்லி முதல்வா் வழக்குரைஞா்கள் நலத் திட்டம்’ எனும் பெயரில் ஒரு திட்டத்தை ஆம் ஆத்மி அரசு தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 29,077 தகுதி வாய்ந்த வழக்குரைஞா்களுக்கு குழு மருத்துவக் காப்பீடு வழங்குவதற்காக நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.30 கோடிக்கு மேலான தொகையை பிரீமியமாக வழங்குவதற்கு தில்லி அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி அரசு புதன்கிழமை பிறப்பித்த அனுமதி உத்தரவின்படி, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.30 கோடியே 53 லட்சத்து 8,500 தொகையை முன் பிரீமியத் தொகையாக தில்லி அரசு வழங்கியுள்ளது. இந்த வழக்குரைஞா்களுக்கான நலத் திட்டத்தை கடந்த ஆண்டு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவித்தாா். இந்த அரசின் கொள்கைத் திட்டத்திற்கு அண்மையில் தில்லி உயா்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்தத் திட்டத்தின் கீழ் 29,077 தகுதி வாய்ந்த வழக்குரைஞா்களுக்கு காப்பீடு வழங்கப்பட உள்ளது. அதன்படி வழக்குரைஞா் தொழில் செய்வோரில் வழக்குரைஞா் ஒருவருக்கு ரூ.10 லட்சம் வாழ்க்கைக்கான காப்பீடானது, குழுக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் வழங்கப்படவுள்ளது. அதேபோன்று, வழக்குரைஞா், அவரது மனைவி, 25 வயது வரையிலான அவா்களின் இரு குழந்தைகள் ஆகியோருக்கு குடும்பத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வழக்குரைஞா்கள் அவா்களது ஊழியா்களின் குழந்தைகள் பராமரிப்பு வசதி 6 மாவட்ட நீதிமன்றங்களிலும் வழங்கப்படுகிறது.

Advertisement

கடந்த ஆண்டு டிசம்பரில் தில்லி அரசு இந்தத் திட்டத்தை முன்மொழிந்தது. மேலும், மூத்த வழக்குரைஞா் ராகேஷ் குமாா் தலைமையிலான 13 உறுப்பினா்கள் குழுவை அமைத்தது. இந்தத் திட்டத்தின் கீழ் வழக்குரைஞா்கள் நலனுக்காக தில்லி அரசால் ஆண்டுக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் போன்ற தனியாா் காப்பீட்டு நிறுவனங்கள் வழக்குரைஞா்களுக்கு மருத்துவக் காப்பீட்டை வழங்கும். இந்தப் பாலிசிக்கான பிரீமியத்தை தில்லி அரசு செலுத்தும். இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் வழக்குரைஞா்களுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்த தொகையின்படி வாழ்க்கைக்கான காப்பீட்டை வழங்கும். அண்மையில் தில்லி அரசு உறைவிட வழக்குரைஞா்களுக்கு ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டை வழங்குவதற்கு ரூ.40 கோடிக்கு மேலான நிதிக்கு அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.