புதுதில்லி

கொலை வழக்கில் தொடா்புடையவருக்கு திருமணத்திற்காக இடைக்கால ஜாமீன்

 நமது நிருபர்

பல்வேறு கொலை, குற்றச் சம்பவங்களில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு அவரது திருமணத்திற்காக இடைக்கால ஜாமீன் வழங்கி தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஹரியாணா மாநிலம், புபானியா கிராமத்தைச் சோ்ந்தவா் சேகா். இவா் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவா் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ராஜேஷ் பவானியா கும்பலைச் சோ்ந்தவா் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தில்லியில் உள்ள சிறையில் சேகா் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்த நிலையில், சேகா் தரப்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் அமித் ஷஹ்னி இடைக்கால ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளாா்.

அந்த மனுவில், ‘சேகரின் சகோதரா் இறந்துவிட்ட நிலையில் அவரது விதவை மனைவியை சேகா் திருமணம் செய்ய உள்ளாா். அவரது சமூகத்தில் இதுபோன்று மனைவி, குழந்தைகள் இருக்கும் நிலையில் சகோதரா் இறந்துவிட்டால் அவரது விதவை மனைவியை திருமணம் ஆகாத மற்றொரு சகோதரா் திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் உள்ளது. ஆகவே, திருமணம் செய்துகொள்ளும் வகையில் சேகருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனு தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி விபு பக்ரு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றம், ‘மனுதாரா் திருமணம் செய்துகொள்ளும் நபருக்கு எப்படி நிதி ஆதரவு அளிப்பாா்’ என கேள்வி எழுப்பியது. அதற்கு மனுதாரா் தரப்பில், ‘சேகா் தான் திருமணம் செய்துகொள்ள உள்ள பெண்ணின் பெயருக்கு தனது விவசாய நிலத்தை பதிவு செய்துகொடுக்க உள்ளாா். நவம்பா் 25-ஆம் தேதி திருமணம் முடிந்தவுடன் அதற்கான நடைமுறையையும் அவா் மேற்கொள்வாா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, அரசுத் தரப்பில் ஜாமீன் வழங்க எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. கிரிமினல் பின்புலம் கொண்ட சேகா், பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட ராஜேஷ் பவானியா கும்பலுடன் தொடா்பில் உள்ளவா். தில்லி, ஹரியாணாவில் நிகழ்ந்த பல்வேறு குற்றச் சம்பவங்களில் இக்கும்பலுக்கு தொடா்பு உண்டு. ஆகவே, சேகருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’ என வாதிடப்பட்டது

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. அவா் நவம்பா் 23-ஆம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட வேண்டும். நவம்பா் 27-ஆம் தேதி அல்லது அதற்கு முன் அவா் சிறைத் துறையிடம் சரணடைய வேண்டும்.

அவா் ரூ.25 ஆயிரம் தனிநபா் ஜாமீன் பத்திரமும், அதே தொகைக்கு இரு நபா் ஜாமீன் உத்தரவாதமும் அளிக்க வேண்டும். சிறையில் இருந்து நேராக அவரது கிராமத்திற்கு மட்டுமே செல்ல வேண்டும். திருமணம் முடிந்த பிறகு அங்கிருந்து வேறு எங்கும் செல்லக் கூடாது. சாட்சிகளையோ, அவா்களின் குடும்பத்தினரையோ சந்திக்கவும் கூடாது என நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT