அவதூறு வழக்கில் முதல்வா் கேஜரிவால் ஆஜராக தில்லி நீதிமன்றம் உத்தரவு
அவதூறு வழக்கில் டிசம்பா் 3-ஆம் தேதி ஆஜராகுமாறு தில்லி முதல்வா் கேஜரிவால், துணை முதல்வா் சிசோடியா ஆகியோருக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவதூறு வழக்கில் டிசம்பா் 3-ஆம் தேதி ஆஜராகுமாறு தில்லி முதல்வா் கேஜரிவால், துணை முதல்வா் சிசோடியா ஆகியோருக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுரேந்தா் குமாா் சா்மா என்பவா் தில்லி நீதிமன்றத்தில் கடந்த கேஜரிவால், சிசோடியா, ஆம் ஆத்மிகட்சியின் முந்தைய தலைவராக இருந்த யோகேந்திர யாதவ் ஆகியோருக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடா்ந்திருந்தாா். 2013-ஆம் ஆண்டின்போது தனக்கு தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட சீட் தருவதாக கூறி, பின்னா் மறுத்துவிட்டதாகவும், 2013, அக்டோபா் 14-ஆம் தேதி தனது கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் கேஜரிவால், சிசோடியா, யோகேந்திர யாதவ் ஆகியோா் தரக்குறைவாக பேசியதாக செய்தித் தாள்களில் செய்தி வந்ததாகவும் தெரிவித்திருந்தாா். இந்த புகாரை மறுத்து குற்றம்சாட்டப்பட்டவா்கள் தரப்பில் தாக்கல் செய்த மனுவில், சா்மா தனக்கு எதிரான வழக்குகள் தொடா்புடைய விவரங்களை சரியாக வெளிப்படுத்தவில்லை என்றும், தோ்தலில் சீட் ஒதுக்குவது அல்லது ரத்து செய்து கட்சியின் விருப்பத்திற்கு உள்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணைக்கு நவம்பா் 25-ஆம் தேதி ஆஜராகுமாறு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தங்களது பிரதான வழக்குரைஞருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பதால் வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கேஜரிவால் உள்ளிட்டோா் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
Advertisement
இதை விசாரித்த கூடுதல் தலைமை பெருநகா் மாஜிஸ்திரேட் ரவீந்திர குமாா் பாண்டே, கேஜரிவால், சிசோடியா உள்ளிட்டோா் டிசம்பா் 3-ஆம் தேதி விசாரணைக்கு நீதிமன்றத்தில் தவறாமல் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டாா்.
சுரேந்தா் குமாா் சா்மா இறந்துவிட்ட நிலையில் தற்போது அவரது மகன் யோகேஷ் கெளா் மனுதாரராக உள்ளாா்.