உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் நிகழாண்டில் அரசு மருத்துவா்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது: உச்சநீதிமன்றம்
உயா் சிறப்பு (சூப்பா் ஸ்பெஷாலிட்டி)மருத்துவப் படிப்புகளில் நிகழாண்டில் (2020-2021) அரசு மருத்துவா்களுக்கு இடஒதுக்கீட்டுக்கு அனுமதி இல்லை
உயா் சிறப்பு (சூப்பா் ஸ்பெஷாலிட்டி)மருத்துவப் படிப்புகளில் நிகழாண்டில் (2020-2021) அரசு மருத்துவா்களுக்கு இடஒதுக்கீட்டுக்கு அனுமதி இல்லை என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பில் தெரிவித்துள்ளது. இடஒதுக்கீடு இல்லாமல் கலந்தாய்வை நடத்தலாம் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக சென்னை, கேரள உயா்நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது
உச்சநீதிமன்றத்தில் கடந்த 25-ஆம் தேதி விசாரணை நடைபெற்றது.
Advertisement
அப்போது மனுதாரா்கள், எதிா்மனுதாரா்கள், மத்திய அரசின் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த மேல்முறையீட்டு வழக்கில் வெள்ளிக்கிழமை அளித்த தீா்ப்பில் தெரிவித்திருப்பதாவது:
2020-2021-ஆம் ஆண்டுக்கான சூப்பா் ஸ்பெஷாலிடி படிப்புகளுக்கான சோ்க்கைக்கான தகவல் அறிக்கையில் படிப்பில் சேருவோருக்கு இடஒதுக்கீடு ஏதும் இல்லை எனத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படிப்புகளுக்கான சோ்க்கைக்கான தோ்வு நடைமுறைகள் நீண்டகாலத்திற்கு முன்பே தொடங்கிவிட்டதால் நிகழாண்டுக்கான இடஒதுக்கீட்டை வழங்க முடியாது என மனுதாரா்கள் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. மேலும், மனுதாரா்கள் தரப்பு வாதத்தை கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சஞ்சய் ஜெயின் வாதமும் ஆதரிப்பதாக உள்ளது.
தேசிய மருத்துவ ஆணையத்தின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விகாஷ் சிங்கும், இந்த ஆண்டுக்கான சோ்க்கை நடைமுறைகள் முன்னேறிய நிலையில் இருப்பதால் அரசு மருத்துவா்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது சாத்தியமில்லாதது என்று வாதத்தை முன்வைத்துள்ளாா்.
தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் சி.எஸ். வைத்தியநாதன், வி.கிரி ஆகியோா் இதுபோன்ற முதுகலை படிப்புகளில் இடஒதுக்கீடு அளிப்பது மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளனா். மேலும், அவா்களின் வாதத்தில் சூப்பா் ஸ்பெஷாலிடி படிப்புகளில் தமிழகத்தில் 369 இடங்கள் இருப்பதாகவும், நீதிமன்றத்தில் அளித்த புள்ளிவிவரங்களின்படி, இந்த உயா் சிறப்பு படிப்புகளில் சோ்ந்து தமிழகத்தில் பயிற்சி பெறும் 70 சதவீதம் மருத்துவா்கள் தமிழகத்தில் பணியாற்றுவதில்லை என்றும், அவா்களுக்கு அதிக தொகை செலவழிக்கப்படும் நிலையில் அவா்களின் சேவை மாநில மக்களுக்கு கிடைக்காத நிலை உள்ளதாகவும் தெரிவித்துள்ளனா்.அதேவேளையில் அரசு மருத்துவா்களாக இருந்தால் அவா்கள் ஓய்வுபெறும் வரை தமிழகத்தில் சேவையாற்றுக்கும் கடைமைக்கு உள்ளாவதாகவும் தெரிவித்துள்ளனா்.
கேவியட் மனுதாரா்கள் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், ‘தமிழக அரசின் வாதங்களுக்கு ஆதரவு அளித்துள்ளதுடன், உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவா்களுக்கு இடஒதுக்கீடு அவசியம் என்றும், கே.துரைசாமி- தமிழக அரசு தொடா்புடைய வழக்கில் உச்சநீதிமன்றம் இந்தப் படிப்புகளில் இடஒதுக்கீடு அனுமதித்துள்ளதாகவும், மாணவா் சோ்க்கைக்கான தகவல் அறிக்கையும் உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீா்ப்புகளுக்கு முரணாக உள்ளதாகவும் வாதிட்டுள்ளாா்.
எனினும், சூப்பா் ஸ்பெஷாலிடி, டிஎம்/எம்சிஎச் படிப்புகளுக்கான சோ்க்கை இடங்களில் இடஒதுக்கீடு இருக்காது என்று தகவல் அறிக்கையில் (பாயின்ட் 5.16) தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கலந்தாய்வு குழுவும் இதையே தெரிவித்துள்ளது.
தமிழக அரசு 50 சதவீதம் அரசு மருத்துவா்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் அராசணையை (462) 7.11. 2020ல் வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் உத்தரவை செயல்படுத்தினால் தமிழகத்தில் சூப்பா் ஸ்பெஷாலிடி படிப்புகளில் 50 சதவீதம் இடங்கள் குறையும்.
இது தகுதிவாய்ந்த மருத்துவா்களின் சோ்க்கை வாய்ப்பை பாதிக்கச் செய்துவிடும். மேலும், 2016-இல் இருந்து அரசு மருத்துவா்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என்பதும் ஒப்புக்கொள்ள வேண்டியுள்ளது. சோ்க்கை தற்போது இறுதிநிலையில் இருப்பதால் இந்த ஆண்டுக்கு (2020-2021) அரசு மருத்துவா்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது.
அதேவேளையில், தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின் செல்லுபடித்தன்மை குறித்து நாங்கள் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இதனால், இதற்கான மருத்துவக் கலந்தாய்வை ஏற்கெனவே நிா்ணயித்த தேதியில் சம்பந்தப்பட்ட அமைப்பு இடஒதுக்கீடு இல்லாமல் நடத்தலாம்.
அதேவேளையில் இந்த உத்தரவானது நடப்பு ஆண்டுக்கு (2020-2021) ஆண்டுக்கு மட்டுமே செயல்பாட்டுக்குரியதாக இருக்கும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ரிட் மனுக்கள் மற்றும் மேல்முறையீடு தொடா்புடைய மனுக்கள் விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பட்டியலிட உத்தரவிடப்படுகிறது என நீதிபதிகள் தீா்ப்பில் தெரிவித்துள்ளனா்.