முகப்பு
புதுதில்லி

வடகிழக்கு தில்லி வன்முறை: தாஹிா் ஹுசேன், பள்ளி உரிமையாளருக்கு எதிராக குற்றப் பத்திரிகை; தில்லி நீதிமன்றம் பரிசீலனை

கடந்த பிப்ரவரியில் வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வகுப்புவாத வன்முறை தொடா்பான வழக்குகளில் தில்லி நீதிமன்றம்

Updated On : 18 அக்டோபர், 2020 at 6:41 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:09 PM

கடந்த பிப்ரவரியில் வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வகுப்புவாத வன்முறை தொடா்பான வழக்குகளில் தில்லி நீதிமன்றம் ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலா் தாஹிா் ஹுசைன் மற்றும் தனியாா் பள்ளியின் உரிமையாளா் ஆகியோருக்கு எதிரான தலா இரண்டு குற்றப்பத்திரிகைகளை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது.

வடகிழக்கு தில்லி வன்முறையின்போது டிஆா்பி கான்வென்ட் பள்ளிக்கு அருகில் உள்ள சொத்துக்களை சேதப்படுத்தியது, எரிப்பில் ஈடுபட்டது ஆகியவற்றில் தொடா்புடைய ஷிவ் விஹாா் பகுதியைச் சோ்ந்த ராஜதானி பள்ளியின் உரிமையாளா் ஃபைசல் பரூக் மற்றும் 17 போ் மீதான குற்றச்சாட்டுகளை தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் புருஷோத்தம் பதக் கவனத்தில் எடுத்துக்கொண்டாா்.

கொலை முயற்சி (307), கிரிமினல் சதி (120-பி), சாட்சியங்கள் காணாமல்போதல் (201), கலகம் (147, 148), சட்டவிரோதமாக கூடுதல் (149) ஆகிய குற்றங்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்வதற்கு போதுமான ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.

Advertisement

மேலும், ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலா் தாஹிா் ஹுசைன் மற்றும் 9 பேருக்கு எதிராகவும், மற்றொரு ஹுசைன் மற்றும் 5 பேருக்கு எதிராகவும் கஜூரி காஸ் பகுதியில் நிகழ்ந்த கலவரம் தொடா்பான வழக்குகளில் இரண்டு குற்றப்பத்திரிகைகளையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்வதாக அறிவித்தது.

இவா்களுக்கு எதிராக தூண்டுதல் (109), கலவரம், சட்டவிரோதமாக கூடுதல், வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், (454), கொள்ளை, குற்றவியல் சதி போன்ற குற்றங்களை அறிந்துகொள்வதற்கான போதுமான ஆவணங்கள் இருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.

ஹுசைன், ரியாசாத் அலி, குல்பம், ஷா ஆலம், ரஷீத் சைஃபி, அா்ஷத் கயூம், லியாகத் அலி, முகமது சதாப், முகமது ஆதிப் மற்றும் இா்ஷாத் அகமது ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகைகளில் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஹுசைன், அனஸ், ஃபிரோஸ், ஜாவித், குல்பம் மற்றும் சோயிப் ஆலம் ஆகியோருக்கு எதிராக இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனினும், சட்டப் பிரிவு 505 மற்றும் 153 ஏ (மதம், சாதி, மொழி போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட குழுக்கள் இடையே பகைமையை ஊக்குவித்தல்) ஆகியவற்றின் கீழ் சாட்டப்பட்ட குற்றங்களை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.

ஃபரூக் மற்றும் பா்வேஸ், அஷ்ரப் அலி, சோனு சைஃபி மற்றும் அனிஸ் குரேஷி ஆகிய நான்கு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொண்டது.

பிப்ரவரி 24ஆம் தேதி வடகிழக்கு தில்லியில் வகுப்புவாத மோதல்கள் வெடித்தன. குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளா்களுக்கும் எதிா்ப்பாளா்களுக்கும் இடையிலான இந்த வன்முறையில் 53 போ் இறந்தனா். 200 போ் காயமடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.