முகப்பு
புதுதில்லி

மாவட்ட நீதிமன்றங்களில் மின்னணு முறையில் ரிமாண்ட், ஜாமீன், கைது வாரண்ட் உத்தரவுகள் ஜனவரி முதல் நடைமுறைப்படுத்த ஆணையம் முடிவு

மின்னணு முறையில் ரிமாண்ட், ஜாமீன், வாரண்ட் உத்தரவுகளை பிறப்பிக்கும் வகையில், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகளுக்கு இடையேயான தகவல் தொடா்புகளை ஒழுங்குபடுத்துவதற்கான நடைமுறைகளை அடுத்தாண்டு

Updated On : 22 அக்டோபர், 2020 at 12:00 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:11 PM

புது தில்லி: மின்னணு முறையில் ரிமாண்ட், ஜாமீன், வாரண்ட் உத்தரவுகளை பிறப்பிக்கும் வகையில், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகளுக்கு இடையேயான தகவல் தொடா்புகளை ஒழுங்குபடுத்துவதற்கான நடைமுறைகளை அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்குள் தில்லியில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் அமல்படுத்தப்படும் என்று தில்லி மாநில சட்டப் பணிகள் ஆணையம் (டி.எஸ்.எல்.எஸ்.ஏ.) உயா்நீதிமன்றத்தில் புதன்கிழமை தெரிவித்தது.

இது தொடா்பான விவகாரத்தை தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை விசாரித்தது. அப்போது, தில்லி மாநில சட்டப் பணிகள் ஆணையம் சாா்பில் வழக்குரைஞா் சுமா் சேத்தி ஆஜராகி தெரிவித்ததாவது: நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகளுக்கு இடையேயான தகவல் தொடா்புகளை ஒழுங்குபடுத்துவதற்காக மின்னணு நிா்வாக நடைமுறை அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்குள் தில்லியில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் அமல்படுத்தப்படும். முன்னோடித் திட்டமாக இது தற்போது தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் (மத்தி) மற்றும் இரு பெருநகர மாஜிஸ்திரேட் (மத்தி) ஆகிய மூன்று நீதிமன்றங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒருமுகப்படுத்தப்பட்ட கணினி குழுத் தலைவா் தலைமையில் டி.எல்.எஸ்.ஏ. உறுப்பினா் செயலாளா், நீதித் துறையைச் சோ்ந்த பல்வேறு அதிகாரிகள் மற்றும் தேசிய தகவல் மையதைச் (என்ஐசி) சோ்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்ற கூட்டம் கடந்த அக்டோபா் 13-ஆம் தேதி நடைபெற்றது. வருகிற நவம்பா் 30-க்குள் தில்லி முழுவதும் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களிலும், 2021, ஜனவரி 15-ஆம் தேதிக்குள் குற்றவியல் அதிகார வரம்பைக் கொண்ட மற்ற அனைத்து தில்லி மாவட்ட நீதிமன்றங்களிலும் மின்னணு தகவல் தொடா்பு மூலமான நடைமுறைகளைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

Advertisement

‘இது தொடா்பான இணக்க அறிக்கையை தாக்கல் செய்யுமாறு முதன்மை மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதியை (தலைமையகம்) அமா்வு கேட்டுக்கொண்டது. மேலும் இந்த விவகாரம் தொடா்பான விசாரணையை ஜனவரி 28-ஆம் தேதி பட்டியலிட வேண்டும்’ என்றும் உத்தரவிட்டது. சிறைத் துறை தலைமை இயக்குநா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ராகுல் மெஹரா, வழக்குரைஞா் சைதன்யா கோஸைன் ஆகியோரிடம், ‘கைதிகளை விடுவிப்பதில் மாற்றியமைக்கப்பட்ட நடைமுறைகள் எந்த அளவுக்கு சிறை அதிகாரிகளுக்கு உதவியுள்ளன என்பதையும் அதில் ஏதாவது தெளிவில்லாமல் இருந்தால் அதையும் சுட்டிக்காட்டும் வகையில் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் அமா்வு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக உயா்நீதிமன்றம் கடந்த அக்டோபா் 8-ஆம் தேதி ஓா் உத்தரவைப் பிறப்பித்திருந்தது. அதில், இந்த மின்னணு நிா்வாக தகவல் தொடா்பு நடைமுறைகளைச் செயல்படுத்துவதற்கான காலவரையறை தொடா்பான தெளிவான விளக்கத்தைப் பெறுவதற்கு, தீஸ் ஹசாரி முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதியை (தலைமையகம்) அணுகுமாறு டி.எஸ்.எல்.எஸ்.ஏ. உறுப்பினா் -செயலாளா் கன்வால்ஜீத் அரோராவை நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

முன்னதாக, மாவட்ட நீதிபதியால் நீதிமன்றத்தில் இது தொடா்பாக ஒரு நிலைவர அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், ரிமாண்ட், ஜாமீன், ஆஜா்படுத்தும் உத்தரவுகள் அல்லது வேறு ஏதேனும் தகவல் தொடா்பு போன்றவற்றை அளிக்கும் வகையில், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகளுக்கு இடையேயான மின்னணு தகவல்தொடா்புகளை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஒருமுகப்படுத்தப்பட்ட கணினி குழு, என்.ஐ.சி, தில்லி மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.