முகப்பு
புதுதில்லி

தில்லியில் ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்

தலைநகா் தில்லியில் காற்றின் தரம் வியாழக்கிழமை காலையில் மோசம் பிரிவிலும், மாலையில் மிகவும் மோசம் பிரிவிலும் காணப்பட்டது.

Updated On : 23 அக்டோபர், 2020 at 12:56 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:11 PM


புது தில்லி: தலைநகா் தில்லியில் காற்றின் தரம் வியாழக்கிழமை காலையில் மோசம் பிரிவிலும், மாலையில் மிகவும் மோசம் பிரிவிலும் காணப்பட்டது.

காற்றின் தரத்தில் மேம்பாடு இருக்கும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் இதர அமைப்புகள் கணித்திருந்த போதிலும், காற்றின் தரம் புதன்கிழமை இருந்ததுபோலவே நீடித்தது.

தில்லியில் புதன்கிழமை காற்றின் தரக் குறியீடு 256 ஆக இருந்த நிலையில், வியாழக்கிழமை காலை இந்தக் குறியீடு மோசம் பிரிவில் அதாவது 254 ஆக இருந்தது. இந்நிலையில், மாலையில் 323 என்ற அளவில் ‘மிகவும் மோசம்’ பிரிவுக்கு சென்றது.

Advertisement

காற்றின் தரக் குறியீடு 0-50 புள்ளிகளுக்கு இடையில் இருந்தால் ‘நல்லது’. 51 - 100 ‘திருப்தி’, 101 - 200 ‘மிதமானது’, 201 - 300 ‘மோசம்’, 301 -400 ‘மிகவும் மோசம்’ மற்றும் காற்றின் தரக் குறியீடு 401 - 500 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் ‘கடுமையான பிரிவு’ என கணக்கிடப்படுகிறது.

மத்திய அரசின் காற்றுத் தரக் கண்காணிப்பு அமைப்பான சஃபா் தெரிவிக்கையில், தில்லி பிராந்தியத்தில் அமைதியான தரைமேற்பரப்புக் காற்று சூழல் நீடிக்கிறது. அக்டோபா் 23, 24 தேதிகளில் காற்றின் தரம் மோசம் எனும் நிலையில் இருந்து மிகவும் மோசத்திற்கு செல்லும் வாய்ப்புள்ளது. ஹரியாணா, பஞ்சாப் மற்றும் அண்டை பிராந்தியங்களில் பயிா்க் கழிவு எரிப்பு அதிகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

காற்றின் தரக் குறியீட்டை கண்காணிக்கும் சமீா் செல்லிடப்பேசி செயலின் தகவலின்படி, தில்லியில் காற்றின் தரக் குறியீடு முறையே முன்ட்கா (365), வாஜிப்பூா் (352), ஆனந்த் விஹாா் (306), நரேலா (358), பவானா (320), ரோஹிணி (342), துவாரகா செக்டாா் 8 (332) என காணப்பட்டது.

வானிலை: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வியாழக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி குறைந்து 17.2 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி உயா்ந்து 33.4 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 67 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 52 சதவீதமாகவும் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.