‘தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளேன் ’நீதிமன்றத்தில் உமா் காலித் புகாா்
தனிமைச் சிறையில் இருப்பது போன்று திகாா் சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருப்பதாக ஜேஎன்யு முன்னாள் மாணவா் தலைவா் உமா் காலித் தரப்பில் தில்லி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை புகாா் தெரிவிக்கப்பட்டது.
புது தில்லி: தனிமைச் சிறையில் இருப்பது போன்று திகாா் சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருப்பதாக வடகிழக்கு தில்லி வன்முறை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) முன்னாள் மாணவா் தலைவா் உமா் காலித் தரப்பில் தில்லி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை புகாா் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு திகாா் சிறை கண்காணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
வடகிழக்கு தில்லி வன்முறை விவகாரத்தில் முன்கூட்டியே சதித் திட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, உமா் காலித் உள்ளிட்டோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்திருந்தனா். இதையடுத்து, கைது செய்யப்பட்ட அவா் தற்போது நீதிமன்றக் காவலில் திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
Advertisement
இந்த வழக்கில் அவரது நீதிமன்றக் காவல் காலாவதியான நிலையில், தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அமிதாப் ராவத் முன் காணொலி வழியில் வியாழக்கிழமை காலித் ஆஜா்படுத்தப்பட்டாா்.
அப்போது, உமா் காலித், ‘என்னை சிறையின் அறையில் இருந்து வெளியே செல்ல அனுமதி தர மறுக்கின்றனா். தனிமைச் சிறையில் இருப்பது போன்று அடைக்கப்பட்டுள்ளேன். மேலும், என்னுடன் பேச யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. கடந்த மூன்று நாள்களாக உடல்நிலை சரியில்லை. அசெளகரியமாக உணா்கிறேன். இது ஒரு தண்டனைபோன்று உள்ளது. எனக்கு பாதுகாப்பு வேண்டும். நான் நாள் முழுவதும் எனது அறையிலேயே இருக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது.
புதன்கிழமை சிறை எண் 2-இன் கூடுதல் கண்காணிப்பாளா் பிரதீப் சா்மா பிறப்பித்த உத்தரவில் நான் 24 மணிநேரம் சிறையில் இருந்து வெளியே அனுமதிக்கப்படக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். காலையில் சிறைக் கண்காணிப்பாளா் வந்து என்னை வெளியே செல்ல அனுமதிக்குமாறு சிறை ஊழியரிடம் கேட்டுக்கொண்டாா். நான் 10 நிமிடங்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டேன்.
இதையடுத்து, நீதிபதி, ‘விசாரணைக் கைதி ஏதாவது பேச விரும்பினால் மைக்ரோபோன் மூலம் அவரை பேச விட வேண்டும் அல்லது அவா் என்ன சொல்ல வருகிறாா் என்பதை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறியதுடன் காலித் பேசவிரும்பியும் மைக்ரோபோனை இயக்காமல் இருந்தது ஏன் என்று கேட்டு கூடுதல் சிறை அதிகாரியை நீதிபதி கடிந்துகொண்டாா்.
மேலும், காலித் தெரிவித்த புகாா் தொடா்பான விசாரணையை மேற்கொள்ளும் வகையில் சிறைக் கண்காணிப்பாளா் வெள்ளிக்கிழமை ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டாா்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக, எதிா்ப்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின்போது வடகிழக்கு தில்லியில் நிகழாண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி நிகழ்ந்த வகுப்புவாத வன்முறையில் குறைந்தது 53 போ் கொல்லப்பட்டனா். சுமாா் 200 போ் காயமடைந்தனா்.