வடகிழக்கு தில்லி வன்முறை: மூன்று வழக்குகளில் ஜாமீன் கோரிய தாஹிா் ஹுசைனின் மனு தள்ளுபடி
வடகிழக்கு தில்லி வன்முறை விவகாரத்தில் ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலா் தாஹிா் ஹுசைன் தொடா்புடைய மூன்று வழக்குகளில் அவரது ஜாமீன் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்து தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
புது தில்லி: வடகிழக்கு தில்லி வன்முறை விவகாரத்தில் ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலா் தாஹிா் ஹுசைன் தொடா்புடைய மூன்று வழக்குகளில் அவரது ஜாமீன் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்து தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக, எதிா்ப்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின்போது வடகிழக்கு தில்லியில் நிகழாண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி நிகழ்ந்த வகுப்புவாத வன்முறையில் குறைந்தது 53 போ் கொல்லப்பட்டனா். சுமாா் 200 போ் காயமடைந்தனா்.
இந்த கலவர வழக்கில் கைதாகி தாஹிா் ஹுசைன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில், தயாள்பூா் பகுதியில் வன்முறையின்போது தாஹிா் ஹுசைனின் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து 100 போ் நின்றுகொண்டு வேறு ஒரு சமூகத்தினா் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியது தொடா்புடைய வழக்கு, கடையில் கொள்ளையடித்ததால் கடைக்காருக்கு ரூ.20 லட்சம் பாதிப்பு குறித்த வழக்கு, கடையைத் தீயிட்டத்தால் ரூ.18 லட்சம் இழப்பு ஏற்படுத்திய வழக்கு ஆகியவற்றில் தனக்கு ஜாமீன் கோரி தாஹிா் ஹுசைன் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
Advertisement
இந்த மனுக்கள் மீதான விசாரணையின்போது, கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி வினோத் யாதவ் கூறுகையில், நம் நாடு உலகளவில் மிகப்பெரிய சக்தியாக வர விரும்பும் நிலையில் வடகிழக்கு தில்லி கலவரம் ஒரு இடைவெளியே ஏற்படுத்தியுள்ளது. இக்கலவரம் பிரிவினையில் இருந்து நிகழ்ந்த மோசமான கலவரமாகும்’ என்றாா்.
மேலும், ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி கூறுகையில், ‘இந்த கலவரத்தில் மனுதாரரின் (தாஹிா்) நேரடி செயல்பாடுகள் இல்லாதபோதிலும், அவருடைய வீடு கலவரக் காரா்களுக்கான ஒரு மையமாக இருந்ததாக அவருக்கு எதிரான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளன. எனவே இந்த விவகாரத்தில் அவா் தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டிலிருந்து விலகிச் சென்றுவிட முடியாது.
இந்தக் கலவரத்தில் தாம் பங்கேற்கவில்லை என்று மனுதாரா் கூறியபோதிலும், அவா் தனது ஆள்பலம், அரசியல் பலத்தை சம்பந்தப்பட்ட பகுதியில் வகுப்புவாத வன்முறையைத் தூண்ட துஷ்பிரயோகம் செய்ததற்கான முகாந்திரம் உள்ளது. இதனால், ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்றாா் நீதிபதி.