அமேஸான் நிறுவனத்துக்கு தில்லி சட்டப்பேரவை அமைதி நல்லிணக்குழு கண்டனம்
தரவு பாதுகாப்பு மசோதா தொடா்பாக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜேபிசி) முன் ஆஜராவதற்கு மின்னணு வா்த்தக
தரவு பாதுகாப்பு மசோதா தொடா்பாக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜேபிசி) முன் ஆஜராவதற்கு மின்னணு வா்த்தக நிறுவனமான அமேஸான் மறுத்ததற்கு தில்லி சட்டப்பேரவை அமைதி நல்லிணக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அமேஸான் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் நாட்டின் இறையாண்மையை மீறும் வகையில் நடந்து கொள்வதை அனுமதிக்க முடியாது என்றும் அந்தக் குழு தெரிவித்துள்ளது.
தனிநபா் தகவல் பாதுகாப்பு, தன்மறைப்பு நெறிகள் தொடா்பாக விளக்கம் கேட்டு முகநூல், சுட்டுரை, அமேஸான் நிறுவனங்களுக்கு ஜேபிசி அழைப்பாணை அனுப்பியிருந்தது. இந்த அழைப்பாணையை ஏற்று முகநூல் நிறுவனத்தின் செயல்திட்ட தலைமைப் பொறுப்பாளா் அங்கிஸ்தாஸ் வெள்ளிக்கிழமை ஜேபிசி முன்பு ஆஜராகி பதில் அளித்தாா். ஆனால், இந்த அழைப்பாணையை ஏற்க அமேஸான் நிறுவனம் மறுத்துவிட்டது.
இந்நிலையில், அமேஸான் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் வகையில் நடந்து கொள்வதாக தில்லி சட்டப்பேரவை அமைதி நல்லிணக்கக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக இக்குழுவின் தலைவா் ராகவ் சத்தா சனிக்கிழமை தில்லியில் கூறியது:
Advertisement
நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்பு அமேஸான் நிறுவனம் ஆஜராக மறுத்த சம்பவத்திலும், தில்லி சட்டப்பேரவை அமைதி நல்லிணக்கக்குழு முன்பு முகநூல் நிறுவனம் ஆஜராக மறுத்த சம்பவத்திலும் நாட்டின் இறையாண்மை கேள்விக்குரியதாகியுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அவைகளை குறைத்து மதிப்பிடும் வகையில் நடந்துகொண்டுள்ளன. இந்தியாவில் பெருமளவில் வணிகம் செய்யும் இந்த நிறுவனங்கள் இந்திய சட்டங்களுக்கு பொறுப்பு சொல்லாமல் தப்பிக்க நினைப்பதை இந்திய இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே பாா்க்க வேண்டும் என்றாா் அவா்.
வடகிழக்கு தில்லி வன்முறை விவகாரத்தில் வெறுப்புப் பேச்சுளை அனுமதித்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்த, தில்லி சட்டப்பேரவை அமைதி நல்லிணக்கக் குழு முகநூல் (ஃபேஸ்புக்) நிறுவனத்துக்கு அண்மையில் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால், முகநூல் நிறுவனத்திடம் விசாரணை நடத்த தில்லி சட்டப்பேரவை அமைதி நல்லிணக்கக் குழுவுக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி அந்த விசாரணையில் முகநூல் நிறுவனம் கலந்து கொள்ளவில்லை.