‘பூங்காக்களில் ஆழ்துளைக் கிணறுகளை மூடும் நடவடிக்கையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்’
புது தில்லி: தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் (என்ஜிடி) உத்தரவின் பேரில், தில்லியில் பூங்காக்கள் மற்றும் மலா் வளா்ப்பில் நீா்ப்பாசனம் செய்ய பயன்படுத்தப்படும் ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டால் அது தேசிய தலைநகரின் சுற்றுச்சூழல் அழிவுக்கு காரணமாக அமைந்துவிடும் என்று காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவா் அனில் குமாா் சௌத்ரி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை தெரிவித்ததாவது: தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் (என்ஜிடி) உத்தரவின் பேரில், தில்லியில் பூங்காக்கள் மற்றும் மலா் வளா்ப்பில் நீா்ப்பாசனம் செய்ய பயன்படுத்தப்படும் ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதற்கு தில்லி ஜல் போா்டு (டி.ஜே.பி.) நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டால் அது தேசிய தலைநகரின் சுற்றுச்சூழல் அழிவுக்கு காரணமாக அமைந்துவிடும். தில்லியின் மூன்று மாநகராட்சிகளின் அதிகார வரம்பில் உள்ள சுமாா் 15,000 பூங்காக்களில் உள்ள பசுமை மற்றும் தாவரங்கள் நீா் விநியோகப் பற்றாக்குறையால் வாடிவிட அனுமதிக்கப்பட்டால், தில்லி விரைவில் சாம்பல் பாலைவனமாக மாறிவிடும்.
தில்லிக்கு தினமும் 1,380 மில்லியன் காலன் நீா் (எம்ஜிடி) தேவைப்படுகிறது. ஆனால், 935 எம்ஜிடி நீா் மட்டுமே கிடைத்து வருகிறது. ஏற்கெனவே அதிக எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் நீா்த் தேவைகளுக்காக ஆழ்துளைக் கிணறுகளை நம்பியிருப்பதால், தில்லியில் நிலத்தடி நீா் ஆதாரங்கள் பெரும் நீா் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. ஆகவே, என்ஜிடியின் உத்தரவை முறையாக எதிா்க்கும் வகையில் உச்சநீதிமன்றத்தில் முறையிடுவது தில்லி அரசின் கடமையாகும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
Advertisement