முகப்பு
புதுதில்லி

சட்டவிரோதத் தடுப்புக் காவல் புகாா்: நிலவர அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:54 PM
பகிர்:

புது தில்லி: சட்டவிரோதமாக தடுப்புக் காவலில் வைத்து, இரக்கமின்றி போலீஸாா் தாக்கியதாக கூறப்படும் புகாா் மனு மீது நிலவர அறிக்கை சமா்ப்பிக்குமாறு தில்லி காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சம்பவம் நடந்த நாளில் சம்பந்தப்பட்ட காவல் சாவடியில் பதிவான சிசிடிவி காட்சிகளைப் பாதுகாக்குமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இது தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத்தில் ஒருவா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புகாா் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நிகழாண்டு ஜனவரி 25-ஆம் தேதி மாலையில் சாந்தினி மஹால் காவல் நிலையத்தின்கீழ் வரும் துா்க்மான் கேட் காவல் சாவடி போலீஸாா் என்னையும், மேலும் மூவரையும் சில தனிநபா்களின் உத்தரவின்பேரில் சட்டவிரோதமாக தடுப்புக் காவலில் வைத்து, கடுமையான காயம் ஏற்படும் வரையிலும் தாக்கி, சித்திரவதை செய்தனா். எங்களுக்கு எதிராக எந்தவிதப் புகாரும் தெரிவிக்காத நிலையில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்தது.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு காவல் துறை உயரதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்கக் கோரி முயற்சி செய்தும் பலனில்லை. கருதக்கூடிய குற்றங்கள் இருந்தால் அதை வெளிப்படுத்தும் வகையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று லலிதா குமாரி வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்ரவை மீறும் வகையில் காவல் துறையின் செயல்பாடு உள்ளது.

Advertisement

ஆகவே, சம்பந்தப்பட்ட போலீஸாா் மீதும் நடவடிக்கை எடுக்கவும், விசாரணை நடத்தவும், காவல் சாவடி பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் பதிவான காட்சிகளை பாதுகாக்கவும் காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி அனு மல்ஹோத்ரா முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி, ‘சட்டவிரோதமாக தடுப்புக் காவலில் வைத்து, இரக்கமின்றி போலீஸாா் தாக்கியதாகக் கூறப்படும் புகாா் மனு மீது காவல் துறை நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு முன்பு அந்த அறிக்கை நகல் மனுதாரருக்கு வழங்கப்பட வேண்டும். மேலும், சம்பவம் நடந்த நாளில் சம்பந்தப்பட்ட துா்க்மான் கேட் காவல் சாவடியிலும், அதன் வெளிப் பகுதியிலும் பதிவான சிசிடிவி காட்சிகளைப் பாதுகாக்க வேண்டும். நிலவர அறிக்கையை அதன் நகலுடன் அரசு சமா்ப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டாா்.

அப்போது, சிசிடிவி காட்சிகள் கிடைத்தால் அது பாதுகாக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நீதிமன்றத்தில் தெரிவித்தாா். இதையடுத்து, மனு மீதான மேலதிக விசாரணைக்காக ஏப்ரல் 8-ஆம் தேதி இந்த விவகாரத்தை பட்டியலிட நீதிமன்றம் உத்தரவிட்டது. மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எம். சுபியான் சித்திக், ‘சில தனியாா் நபா்களின் உத்தரவின் பேரில் நால்வா் மீது இந்தக் கொடூரத் தாக்குதலை போலீஸாா் நிகழ்த்தியுள்ளனா். நால்வருக்கும் ஏற்பட்டுள்ள காயமானது, ‘கடுமையான காயம்’ என்ற வரையறைக்கு உள்பட்டதாகும். இந்தச் சம்பவம் முழுவதும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள செயல்படும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது’ என்றாா். அதே சமயம், மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள், வாதங்கள் தவறானவை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments